டெல்லி: கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தக் கூடாது என்று அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
இது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது: அவசர கால அனுமதியின் அடிப்படையில் செலுத்தப்பட உள்ள கொரோனா தடுப்பூசிகள் 18 வயது மற்றும் அதனை கடந்தவர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.
தடுப்பூசி தயாரிப்புப் பணியின் போது, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனைக் கூடங்களில் ஆய்வு நடத்தப்படவில்லை. எனவே கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2 விதமான கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டி இருந்தால் ஒரு தடுப்பூசிக்கும், அடுத்த தடுப்பூசிக்கும் 14 நாள்கள் இடைவெளி நிச்சயம் வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களும் வெளியிடப்பட்டு உள்ளன.
கோவிஷீல்டு மருந்து செலுத்திக் கொள்பவர்களுக்கு தடுப்பூசி போட்ட இடத்தில் சிலருக்கு அரிப்பு, வலி ஏற்படலாம். சிலருக்கு தலைவலி, மயக்கம் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்படலாம்.
கோவாக்சின் மருந்து செலுத்திய இடத்தில் வலியும், செலுத்தி கொண்டவர்களுக்கு தலைவலி, மயக்கம், காய்ச்சல், உடல் வலி, வயிற்று வலி, வாந்தி, அதிக வியர்வை, உடல் குளிர்தல், இருமல், தடுப்பூசி போட்ட இடத்தில் வீக்கம் போன்றவையும் ஏற்படலாம் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.