டெல்லி: ஒத்தி வைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம், ஜனவரி 31ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைபெறும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது.
போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டும் போலியோ சொட்டு மருந்து முகாம், வருகிற 17-ந் தேதி (நாளை மறுதினம்) நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாளை (16ந்தேதி) நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளதால், சுகாதாரப் பணியாளர்கள் அதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், போலியோ சொட்டு முகாம்களை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. அதையடுத்து, போலியா சொட்டு மருந்து முகாம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது, மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாபக வரும் 30 ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைப்பார் என்று, அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் முகாம்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த முகாம்கள் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், முக்கிய பேருந்து, ரயில் நிலையம், சமுதாய நலக்கூடம் உள்பட முக்கிய பகுதிகளில் நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். 5வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.