புதுடெல்லி: இந்திய அணிக்கு தேவைப்பட்டால், ஆஸ்திரேலியா செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று கிண்டலாக பேசியுள்ளார் முன்னாள் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் வீரர்கள் பலர் தொடர்ச்சியாக காயமடைந்து, நாடு திரும்புவதும், போட்டியிலிருந்து விலகுவதுமாக இருக்கும் சூழலில், இவ்வாறு பேசியுள்ளார் சேவாக்.
இந்திய அணியில், விராத் கோலி நாடு திரும்பிவிட்ட சூழலில், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், அனுமன் விஹாரி, கேஎல் ராகுல் உள்ளிட்டவர்கள் காயம் காரணமாக விலகிவிட்டனர். கடைசி டெஸ்ட்டிலிருந்து ஜஸ்பிரிட் பும்ராவும் விலகுவதாக தகவல்கள் வருகின்றன.
இதனால், பிரிஸ்பேனில் நடைபெறும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நிலை என்னாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது சேவாக் பேசியுள்ளதாவது, “இந்திய அணியில் களமிறங்க 11 வீரர்கள் இல்லாவிட்டால், நான் இந்திய அணிக்கு உதவுவதற்கு தயாராக இருக்கிறேன். இந்திய அணியில் இணையவும் தயார். ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படவும் சம்மதம். ஆனால், எனக்கு அங்கு தனிமைப்படுத்தும் விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்” என்று கிண்டல் தொனிக்கப் பேசியுள்ளார்.