சென்னை
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் மே மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை நடத்தி வருகின்றன. அவ்வகையில் திமுக இளைஞர் அணி செயலாளரும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் எங்கும் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் நடத்தி வருகிறார்.
அவர் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக மற்றும், தமிழக முதல்வர் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இது அதிமுகவினர் இடையே கடும் கோபத்தை உண்டாக்கி உள்ளது. இதனால் அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ராமலட்சுமி காவல்துறையினரிடம் உதயநிதி ஸ்டாலின் குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில் உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக பெண்களைக் குறித்தும் அவதூறாகப் பேசுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலின் மீது கலவரம் தூண்டும் வகையில் பேசுவது, அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளது.