சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேமுதிக கட்சி பொறுப்பாளர்களுடன், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியளார்களை சந்தித்தவர், 41 சீட் தரும் கட்சியுடன்தான கூட்டணி என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இதேபோல் தேமுதிகவும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. மேலும் தேர்தல் பிரச்சாரத்தை தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல், கள நிலவரம், கூட்டணி தொடர்பாக மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகளை கொடுக்கும் கட்சி உடன் கூட்டணி என்பது தேமுதிகவின் நிலைப்பாடு , 2011-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம், அதிமுக ஆட்சி தான் இதுவரை தொடர்கிறது என்று சுட்டிக்காட்டியதுடன், தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்தக் கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்றும், அதிமுகவுக்கு செய்தியாளர்கள் மூலம் தனது ஆசையை தெரிவித்துள்ளார்.