வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டிஜிட்டல் பிரச்சார இயக்குநர் கேரி கோபியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
அவர், தனது டிவிட்டர் பெயரை, டொனால்ட் டிரம்ப் என்று மாற்றிக்கொண்டு, அவரின் கணக்கிலிருந்து டிவீட்டியதால், டிவிட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமூகவலைதளப் பதிவுகளின் மூலம் தனது ஆதரவாளர்கள் மத்தியில் வன்முறை எண்ணங்களை விதைத்து வருகிறார்.
இதன்விளைவாக, ஆயிரக்கணக்கில் திரண்ட அவரின் ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்கினர். இந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, டிரம்ப்பிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து கண்டனங்களும் குவிந்தன.
இந்த வன்முறையை எதிர்த்து, வெள்ளை மாளிகையில் பணியாற்றிய பல அதிகாரிகளும் ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டிரம்ப்பின் துணை அதிபர்கூட இச்செயலை ஆதரிக்கவில்லை.
இந்நிலையில், டிரம்ப்பினுடைய டிஜிட்டல் பிரச்சார இயக்குநரின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.