சென்னை: மும்பையில் உள்ள மத்திய திரைப்படப் பிரிவை அம்பானிக்கு தாரைவார்க்க பாஜ அரசு முயற்சித்து வருகிறது, இதனால் காங்கிரஸ் சாதனைகளை மறைக்க மோடி அரசு செயல்பட்டு வருகிறது என மூத்த காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமர் நேருவால் உருவாக்கப்பட்ட, மும்பை மத்திய திரைப்படப்பிரிவு 75வது ஆண்டை நெருங்கி வருகிறது. அங்கு வரலாற்று சிறப்பு மிக்க கோப்புகள், சுதந்திர போராட்ட காட்சிகள், உப்பு சத்தியாகிரகம், தண்டி யாத்திரை போன்றவை குறித்த ஆவனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை அழிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த இடத்தை பிரபல தொழிலதிபர் அம்பானிக்கு தாரைவார்க்க பாஜ அரசு. முயற்சித்து வருகிறது. அவ்வாறு நடந்தால், காங்கிரஸ் செய்த சாதனைகள் வருங்கால சந்ததிகளுக்கு தெரியாமலே போய்விடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து குமரிஅனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆசியாவிலேயே காட்சி ஊடகங்களின் தாய் நிறுவனமாக 1948-ல்நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் மத்திய திரைப்படப் பிரிவு உருவாக்கப்பட்டது. 75 ஆண்டுகளை நெருங்கும் இந்நிறுவனம் மும்பையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் இயக்கம் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரப் போராட்ட காட்சிகள், உப்பு சத்தியாகிரகம், தண்டி யாத்திரை என்று மகாத்மா காந்தியும், நேருவும் நடத்திய போராட்ட காட்சிகள், கோப்புகளை மத்திய திரைப்பட பிரிவு பாதுகாத்து வருகிறது.
விடுதலைக்குப் பிறகு நேரு உருவாக்கிய நவீன இந்தியாவின் அடிப்படை திட்டங்களான அணைகள், தொழிற்சாலைகள், நேரு, இந்திரா, ராஜீவ் காந்தியின் திட்டங்கள், காங்கிரஸ் பேரியக்க செயல்பாடுகள் போன்ற காட்சிகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு, அவற்றை மத்திய திரைப்படப் பிரிவு பாதுகாத்து வருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மத்திய திரைப்படப் பிரிவை, தேசியதிரைப்பட வளர்ச்சிக் கழகம் என்ற பொதுத்துறை நிறுவனத்துடன் இணைக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேருவால் மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட மத்திய திரைப்படப் பிரிவின் இடத்தை தொழிலதிபர் அம்பானிக்கு தாரை வார்க்க மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் அடையாளத்தை அழிக்க பல்வேறு திட்டங்களை பாஜக செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் மத்திய திரைப்பட பிரிவு.
இவ்வாறு கூறியுள்ளார்.