அகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மாதவ்சிங் சோலங்கி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பழம்பெரும் தலைவர்களில் ஒருவர் மாதவ்சிங் சோலங்கி. இவருக்கு வயது 93. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான சோலங்கி, மாநில முதல்வராக 4 முறை பணியாற்றியுள்ளார். கடந்த 1991ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை மத்திய அரசில் வெளிவிவகார துறை மந்திரியாகவும் இருந்துள்ளார்.
வயது முதிர்வு காரணமாக, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த சோலங்கி, இன்று அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சோலங்கியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து மோடி பதிவிட்டுள்ள இரங்கல் டிவிட்டில், சமூகத்திற்கு ஆற்றிய அளப்பரிய சேவைகளுக்காக மாதவ் சிங் சோலங்கி ஜி நினைவுகூரப்படுவார். அரசியலுக்கு அப்பாற்பட்டு, நூல்கள் வாசிப்பதில் சோலங்கி ஜி மகிழ்ச்சி அடைபவர். கலாசாரம் மீதும் ஆர்வம் கொண்டவர். அவரை சந்திக்கும்போதும், அவரிடம் பேசும்போதும் புத்தகங்களை பற்றி நாங்கள் விவாதித்து கொள்வோம். சமீபத்தில் வாசித்த புதிய புத்தகம் பற்றி அவர் என்னிடம் கூறுவார். எங்களுக்கு இடையேயான உரையாடல்களில் நான் எப்போதும் மகிழ்ச்சி அடைவேன என தெரிவித்துள்ளார்.