சென்னை: திரையரங்குகளில் 100 % இருக்கைக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ள விவகாரம் சர்ச்சையானதுடன், நீதிமன்றமும் கண்டித்துள்ளது. இதையடுத்து, முதல்வர்  அதிகாரிகளுடன் ஆலோசித்து  முடிவு செய்வார் என அமைச்சர் கடம்பூர் ராஜு  தெரிவித்து உள்ளார்.

திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று, பொங்கல்முதல்  திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்து கடந்த 4-ஆம்தேதி அரசாணை வெளியிட்டிருந்தது.  ஆனால், இது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. மருத்துவர்கள் உள்பட பல தரப்பினர் அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மத்தியஅரசும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

உருமாறிய கொரோனா பரவிவரும் இந்நிலையில் இந்த ஆணை குறித்து மீண்டும் பரிசீலிக்கும்படி மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் குழு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. உயர்நீதிமன்றங்களும் தமிழகஅரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்ததுடன், பள்ளிகளே இன்னும் திறக்கப்படாத நிலையில், தியேட்டர் திறப்பதற்கு என்ன அவசரம் என கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில் செய்தியளார்களை சந்தித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரையரங்கு விவகாரம் தொடர்பாக முதல்வர், அதிகாரிகளுடன் கலந்து பேசி இறுதியான முடிவை அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.