திருவனந்தபுரம்: கேரள சட்டமன்ற புத்தாண்டு (2021) கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் கூட்டத்திலேயே, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆளும் அரசுக்கு எதிராக சபையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

கேரள சட்டப்பேரவையின் 22வது பேரவைக் கூட்டம் இன்று (ஜனவரி 8) முறைப்படி தொடங்கியது. புத்தாண்டின் முதல்கூட்டம் என்பதால், மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையாற்றினார்.
ஆப்போது, எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தலைமையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளும் இடது முன்னணி அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர். கேரளத் தங்கக் கடத்தல் வழக்கு உள்பட பல குற்றச்சாட்டுக்குகளை கூறிய எதிர்க்கட்சித்தலைவர், ரமேஷ் சென்னிதாலா, “இது ஊழல் மிகுந்த அரசு” எனக் குற்றம்சாட்டினார். தொடர்ந்து சட்டமன்ற வளாகத்தில் அரசுக்கு எதிரான வாசகர்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளுடன் கோஷம் எழுப்பினர்.

கேரளாவிலும், தமிழகத்தைப்போல இந்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சட்டமன்றத்தில் வரும் 15ந்தேதி நிதியமைச்சர் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று, ஜனவரி 28ஆம் தேதி சட்டப்பேரவை அமர்வு நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]