டில்லி
மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணியில் அரசுடன் இணைந்து செயல்படத் தனியார் நிறுவனங்கள் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் இதுவரை 1.03 கோடி பேர் பாதிக்கப்பட்டு சுமார் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். இங்கு தற்போது 2.28 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் இரண்டு தடுப்பூசிகளுக்கு இதுவரை அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த கொரோனா தடுப்பூசி வழங்கலுக்கு உதவ தனியார்த் துறை நிறுவனங்கள் விரும்புவதாக இந்திய வர்த்தக மற்றும் தொழிலக சம்மேளனம், தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி வழங்குதல், நிர்வாகம், ஆகிய பணிகளில் மத்திய மாநில அரசுகளுக்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளன. இது குறித்து சம்மேளனம் ஒரு விரிவான அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.
அதில் தனியார்த் துறை நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலில் இருந்து அனைத்து பணிகளிலும் கூட்டாகச் செயல்பட விரும்புவதைச் சம்மேளனம் எடுத்துரைத்துள்ளது. இந்த மருந்துகளைச் செலுத்த அந்நிறுவனங்களின் சுகாதாரத் துறை ஊழியர்கள் உதவலாம் எனக் கூறும் இந்த அறிக்கை தேசிய தடுப்பூசி இறக்குமதி ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.