வாஷிங்டன்: வன்முறையை தூண்டும் வகையிலான வீடியோக்களை தனது சமூக வலைதளங்களில் பரப்பியதால், அதை உடடினயாக நீக்கிய சமூக வலைதள நிறுவனங்கள், அவரது கண்குகளை முடக்கி வைத்துள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வியடைந்தாலும் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். மேலும், தேர்தல் தொடர்பாக அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில், ஆத்திரமூட்டும் வகையில் கருத்துக்களையும் வீடியோவையும் பதிந்து வருகிறார்.
இந்த நிலையில், அங்கு புதிய அதிபர் பதவி ஏற்கும் நிகழ்ச்சி தொடர்பாக, ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று ( வியாழக்கிழமை) நடைபெற்றது. இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்ட வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திடீரென நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டத்தினரை கலைக்க தூப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒரு பெண் பலியானார்.
இந்த நிலையில், தவறான கருத்துக்களை பரப்பிய டிரம்பின் தகவல்களை நீக்கி சமூக வலைதள நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்தன. அதைத் தொடர்ந்து, டிரம்பின் டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிர்வாகம் 12 மணி நேரத்திற்கு முடக்கியுள்ளது . இதே போன்று தொடர்ந்து தவறான தகவல்களை தனது ட்விட்டர் கணக்கில் டிரம்ப் பரப்பி வந்தால் அவரது கணக்கு நிரந்தரமாக நீக்கப்படும் என்றும் ட்விட்டர் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது
அதுபோல டிரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கை அந்நிறுவனம் 24 மணி நேரம் முடக்கி வைப்பதாக அறிவித்து உள்ளது. மேலும் பேஸ்புக் நிறுவனமும் டிரம்பின் பக்கங்களை முடக்கி வைத்துள்ளது. அமெரிக்க அதிபருக்கு எதிராக சமூக வலைதள நிறுவனங்கள் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது