வாஷிங்டன்

மெரிக்காவில் விரைவில் தினசரி 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட  உள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத் துறை தலைவர் ஆண்டனி ஃபாசி தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  இதையொட்டி அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணி தொடங்கி உள்ளது.  கடந்த மாதம் 14 ஆம் தேதி இந்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது.  இடையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்துள்ளனர்.

தற்போது விடுமுறைகள் முடிந்துள்ளதால் மீண்டும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது.  தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் கணக்குப்படி உடனடியாக 1.70 கோடி ஊசிகள் தேவைப்படுகையில் தற்போது 48 லட்சம் தடுப்பூசிகள் கைவசம் உள்ளன.  எனவே தற்போது தேர்வு செய்யப்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

இந்நிலையில் அமெரிக்கச் சுகாதாரத்துறைத் தலைவர் ஆண்டனி ஃபாசி, “தற்போது கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.  மேலும் போதிய மருந்து கிடைத்தவுடன் இந்த பணி அதிகரிக்கப்பட உள்ளன்.  அதன் பிறகு தினசரி குறைந்தது 10 லட்சம் பேர் அல்லது அதற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப் பட உள்ளன.

அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன் ஏற்கனவே 100 நாட்களில் 100 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி அளிக்க வேண்டும் என ஒரு இலக்கை தெரிவித்துள்ளார்.  அந்த இலக்கு மிகவும் இயற்கையான ஒரு இலக்காகும். மற்றும் இந்த முக்கியமான இலக்கு அடையக்கூடியதாகும்.   தற்போது கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருகின்றன. இதைச் சமாளிக்க மேலும் மருத்துவமனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.