சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான பார்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பார்களைச் தேடிச்செல்லும் ‘குடி’ மகன்கள் வெகுவாக குறைந்து விட்டதாக பார் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் டிசம்பர் 29ந்தேதி முதல் 50% இருக்கைகளுடன் டாஸ்மாக் மதுபான பார்கள் திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கிய நிலையில், எதிர்பார்த்த அளவில் ‘குடி’ மக்கள் பார்களுக்கு வரவில்லை என பார் உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.
தமிழகம் முழுவதும சுமார் 3250 டாஸ்மாக் மது பார்கள் உள்ளன. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் தேதி மூடப்பட்டது. பின்னர் கொரோனா பொதுமுடகக தளர்வுகள் காரணமாக டாஸ்மாக் கடைகளை மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மே மாதம் 7ந்தேதி டாஸ்மாக் கடைகள் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் முதல்கட்டமாக திறக்கப்பட்டன. ஆனால், பார்களை திறக்க தமிழகஅரசு இதுவரை அனுமதி வழங்காமல் இருந்து வந்தது. இதனால், பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். அதைத்தொடர்ந்து டிசம்பர் 29 (2019) முதல் 50 சதவிகிதம் இருக்கைகளுடன் பார் திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கியது.
ஆனால், பார்களுக்கு எதிர்பார்த்த அளவுக்க குடிமகன்கள் வரவில்லை என்று பார் உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். பார்கள் திறக்கப்படாத நிலையில், குடிகாரர்கள், வேறு சில இடங்களை நாடி சென்றதுடன், ஒதுக்குப்புற பகுதிகளும் தற்காலிக பாராக மாறியது. மேலும், பலர், தங்களது வீடுகளுக்கே எடுத்துச்சென்று குடிக்கும் நிலைக்கு மாற்றிக்கொண்டனர். இதனால், பார்களுக்கு வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
மேலும், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, வேலையிழந்த நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் முழுமையாக பணிக்கு திரும்பாத நிலையில் பார்களைச் தேடிச்செல்லும் குடி மகன்களின் எண்ணிக்கையும் குறைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ள தமிழ்நாடு டாஸ்மாக் பார் மற்றும் கட்டிட உரிமையாளர் சங்கம் என் அன்பரசன்,
பார் திறக்கப்பட்ட நாள் முதல் இதுவரை சுமார் 20 முதல் 25 சதவிகிதம் அளவிலேயே வியாபாரம் நடைபெற்று வருவதாகவும், தொற்று பரவலுக்கு முந்தைய நிலைக்கு இன்னும் பார்கள் திரும்பவில்லை என்றதுடன், பார்களை தேடி வரும் ஒரு பகுதியினர் வீட்டிலேயே மது அருந்துவதைப் பழக்கப்படுத்தியுள்ளனர் ”என்று தெரிவித்துள்ளார்.
பார்களை தேடிசசெல்லும் குடி மகன்களின் குறைவுக்கு காரணம் கொரோனா அச்சமா? அல்லது அவர்களின் வாழ்க்கை சூழலா என்பது போகப்போகத்தான் தெரிய வரும்.