2021ம் ஆண்டில் பைரவருக்கு உகந்த அஷ்டமி நாட்கள்!
காலபைரவரை ஒவ்வொரு அஷ்டமியிலும் வணங்கி வழிபடுவது நிறையவே விசேஷம். பைரவ வழிபாடு செய்வதும் பைரவாஷ்டகம் சொல்லி வணங்குவதும் பலன்களைத் தந்தருளும். பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். தெருநாய்களுக்கு உணவளிப்பதும் பிஸ்கட் வழங்குவதும் எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கும். துஷ்ட சக்திகள் நம்மை நெருங்கவிடாமல் பைரவர் காத்தருளுவார்.
பைரவ வழிபாடு என்பது மிக மிக வலிமையான வழிபாடுகளில் ஒன்று. கலியுகத்துக்குக் காலபைரவர் என்றொரு சொல் உண்டு. பைரவரை அஷ்டமியில் வழிபடுவார்கள் பக்தர்கள். குறிப்பாக, தேய்பிறை அஷ்டமியில் பைரவ வழிபாடு செய்வது கூடுதல் பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு தனிச்சன்னிதி உள்ளது. நின்ற திருக்கோலத்தில் பைரவர் காட்சி தருகிறார். சிவபெருமானின் சன்னிதியைச் சுற்றி கோஷ்டத்தை வலம் வந்து முடிவுறும் இடத்தில் பைரவர், சூரியனார் சன்னிதிகள் இருப்பதை காணலாம்.
பைரவ மூர்த்தம் என்பது சக்தி வாய்ந்த தெய்வம். எதிரிகளையும் துஷ்ட சக்திகளையும் அழிக்க வல்லவர் பைரவர். நமக்கு இதுவரை இருந்த தடைகளையெல்லாம் தகர்த்து அருளுபவர் பைரவர் என்கிறார்கள் பெரியோர்கள்.
வருகிற 2021ம் ஆண்டில், ஜனவரி மாதம் 6ம் தேதியும் 21ம் தேதியும் அஷ்டமி. இந்த நாளில் பைரவருக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். பிப்ரவரி மாதத்தில், 5ம் தேதியும் 20ம் தேதியும் மார்ச் மாதத்தில் 6ம் தேதியும் 21ம் தேதியும் அஷ்டமி நாட்கள்.
ஏப்ரல் மாதத்தில், 5ம் தேதியும் 20ம் தேதியும் அஷ்டமி நாட்கள். மே மாதத்தில் 4ம் தேதியும் 20ம் தேதியும் ஜூன் மாதத்தில் 3ம் தேதியும் 18ம் தேதியும் அஷ்டமி நாட்கள். பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வது விசேஷம். மிளகு சாதம் நைவேத்தியம் செய்து அக்கம் பக்கத்தாருக்கு வழங்கலாம். நான்குபேருக்கேனும் அன்னதானம் செய்து அஷ்டமியில் வழிபடலாம்.
ஜூலை மாதம் 2ம் தேதியும் 17ம் தேதியும் அஷ்டமி தினங்கள். ஆகஸ்ட் மாதத்தில், மூன்று அஷ்டமி வருகிறது. 1ம் தேதியும் 16ம் தேதியும் 30ம் தேதியும் அஷ்டமி தினங்கள். செப்டம்பர் மாதத்தில், 14ம் தேதியும் 29ம் தேதியும் அஷ்டமி தினங்கள்.
அக்டோபர் மாதத்தில் 13ம் தேதியும் 29ம் தேதியும் அஷ்டமி நாட்கள். நவம்பர் மாதத்தில் 12ம் தேதியும் 27ம் தேதியும் டிசம்பர் மாதத்தில் 11ம் தேதியும் 27ம் தேதியும் அஷ்டமி தினங்கள்.
இந்த தினங்களில் பைரவ வழிபாடு செய்வதும் பைரவாஷ்டகம் சொல்லி வணங்குவதும் பலன்களைத் தந்தருளும். பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். தெருநாய்களுக்கு உணவளிப்பதும் பிஸ்கட் வழங்குவதும் எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கும். துஷ்ட சக்திகள் நம்மை நெருங்கவிடாமல் பைரவர் காத்தருளுவார்.
அஷ்டமி என்றில்லாமல், பைரவரை எப்போதும் வழிபடலாம். பைரவரை நினைத்து தெரு நாய்களுக்கு எப்போதும் உணவளிக்கலாம் என்கிறார்கள் பெரியோர்கள்.