டில்லி
நூறாண்டுகள் பழமையான சாந்தினி சவுக் அனுமார் கோவிலை இடிப்புக்கு பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
டில்லியில் உள்ள சாந்தினி சவுக் அனுமார் கோவில் மிகவும் பிரபலமானதாகும். இந்த கோவில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். சாந்தினி சவுக் பகுதியை அழகுபடுத்தும் பணிகளில் ஒன்றாக இந்த கோவிலை இடிக்கத் தீர்மானம் செய்யப்பட்டது. இந்த கோவில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு எழுப்பப்பட்டுள்ளதால் இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையொட்டி இந்த கோவில் டில்லி மாநகராட்சியால் இடிக்கப்பட்டுள்ளது. டில்லி மாநகராட்சி தற்போது பாஜகவின் ஆளுமையில் உள்ளது. டில்லி மாநில அரசை ஆம் ஆத்மி ஆட்சி செய்கிறது/. இந்த இடிப்புக்குக் காரணமாக பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த துர்கேஷ் பதக், “பாஜக இந்துக்களுக்கு ஆதரவான கட்சி என சொல்லிக் கொண்டுள்ள போது தற்போது அக்கட்சியின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது. நூற்றாண்டு பழமையான இந்த கோவிலை இடித்ததன் மூலம் லட்சக்கணக்கான இந்துக்களின் உணர்வை பாஜக காயப்படுத்தி உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் செய்தி தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர்,டில்லி முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் அனுமார் கோவில் இடிப்புக்காக முதல்வருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கோவிலை மீண்டும் கட்டி தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். சாந்தினி சவுக் அழகுபடுத்தும் பணிகளை டில்லி அரசு செய்து வருவதால் இந்த இடிப்புக்கு ஆம் ஆத்மி பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார்.