டில்லி

பாஜகவின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் 39 நாட்களாகத் தொடர்கிறது.

மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி நாடெங்கும் கோரிக்கை எழுந்துள்ளது.  பஞ்சாப், அரியான உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கட்னத மாதம் 26 ஆம் தேதிமுதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  டில்லியில் புராரி மைதானத்திலும் டில்லியின் எல்லைப்பகுதிகளிலும் கடும் குளிரில் தொடர்ந்து 39 ஆம் நாளாகப் போராட்டம் நடக்கிறது.

விவசாயிகளுடன் மத்திய அரசு இதுவரை 6 கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தி உள்ளது.  சமீபத்தில் நடந்த 6 ஆம் கட்ட பேச்சு வார்த்தையில் விவசாயிகளில் 50% கோரிக்கைகளுக்கு முடிவு காணப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  நாளை அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.  இந்த பேச்சு வார்த்தையில் வேளாண் சட்டம் திரும்பப் பெறுதல் குறைந்த பட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

விவசாய போராளிகள் இந்த பேச்சு வார்த்தையில் தங்களுக்குச் சாதகமான முடிவு வரும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.  ஒருவேளை இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தால் போராட்டங்களைத் தீவிரப் படுத்த முடிவு செய்துள்ளனர்.   வரும் 6 ஆம் தேதி அன்று மிகப்பெரிய அளவில் டிராக்டர் பேரணி மற்றும் அரியானாவில் கடை அடைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.