புதுடெல்லி :

நாகாலாந்து மாநிலத்தில் வௌவால்கள் மீது சீனா மேற்கொண்ட ஆய்வுக்கு அரசுக்கு தெரியாமல் சீனர்களுக்கு அனுமதி வழங்கியவர் பிரதமரின் அறிவியல் ஆலோசகரான விஜயராகவன் என்ற அதிர்ச்சிகரமான தகவலை தனது ட்வீடில் பதிவிட்டிருக்கிறார் சுப்ரமணிய சாமி.

நாட்டின் மிக முக்கிய பொறுப்புகளில் ஒன்றான பிரதமரின் அறிவியல் ஆலோசகர் எனும் செயலாளர் அந்தஸ்திலான இந்த பதவியில், 2018 ம் ஆண்டு முதல் டாக்டர் கே. விஜயராகவன் பொறுப்பில் இருக்கிறார்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகின் அனைத்து நாடுகளையும் கடந்த ஓராண்டாக ‘அல்லோல கல்லோல’ பட வைத்திருக்கிறது, இந்த வைரஸ் வௌவால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சீனாவை உலக நாடுகள் குற்றம்சாட்டி தனிமைபடுத்திய அதேநேரத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் சீனா ரகசிய ஆய்வு நடத்தியதாக அப்போது செய்திகள் பரவியது.

இந்நிலையில், பிரதமரின் அறிவியல் ஆலோசகர் எனும் உயரிய பொறுப்பில் உள்ள ஒருவருக்கு உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் குறித்த சதியில் பங்கு இருப்பதாக கூறும் சுப்ரமணிய சாமியின் குற்றச்சாட்டு மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுக்கு எதிராக செயல்படுவது, இறப்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர் மீது இ.பி.கோ. 120 ஏ&பி, 121 மற்றும் 123 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து இவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ள்ளார்.

மேலும், சுயசார்பு பாரதம் என்று அறிவித்து விட்டு, இந்தியாவில் தயாரித்த தடுப்பூசிகளை பயன்படுத்தாமல், பிரிட்டன் வழியாக பில் கேட்ஸ் நிறுவனம் தயாரித்த மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.