திருப்பாவை பாடல் 18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.

விளக்கம்: பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும். வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் எதற்கடா அதெல்லாம் என்று மீசையை முறுக்குவார். அதையே, அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால்…அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்! அதனால், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.