ஸ்ரீநகர்: அமலாக்கத்துறையைக் கொண்டு அரசியல் எதிரிகளை வேட்டையாடி வருகிறது என ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயக கட்சித்தலைவர் மெகபூபா முப்தி, பிரதமர் மோடிமீது குற்றம்சாட்டி உள்ளார்.
தன்னாட்சி பெற்ற அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறைக் கொண்டு, எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டி வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இருந்தால், அதன் போக்கு மாறியதாக தெரியவில்லை.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து, ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி அமலாக்கத்துறை இயக்குனருக்கு காட்டமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதை தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றியதுடன், மத்தியில் ஆட்சி செய்யும் அரசு தனது அரசியல் எதிரிகளை வேட்டையாட அமலாக்கத்துறையை ஆயுதமாக பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த கடிதத்தில், அமலாக்கத்துறை காஷ்மீரை சேர்ந்த பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இது ஈ.சி.ஐ.ஆர்., 16, எச்.ஐ.வி., 2020 தொடர்பாக இருக்கலாம் என்று எனது கவனத்துக்கு வந்துள்ளது. சம்மன் அனுப்பப்பட்ட நபர்கள் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஒற்றுமை என்னவென்றால், அவர்கள் அனைவரும் என்னுடன், எனது குடும்பத்தினருடன் அல்லது என்னை அரசியல் அல்லது வேறு விதத்தில் என்னை அறிந்தவர்கள்.
இந்த நபர்களிடம், எனது தனிப்பட்ட, அரசியல் மற்றும் நிதி விவகாரங்கள், எனது மறைந்த தந்தையின் கல்லறை மற்றும் நினைவுச்சின்னம், என் சகோதரியின் நிதி, வீடு, கட்டுமானம், எனது சகோதர்களின் நிதி மற்றும் தனிப்பட்ட விவகாரங்கள் போன்றவை குறித்து கேள்விகள் கேட்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.
நான் ஒரு பொறுப்புள்ள குடிமகள் மற்றும் அரசியல்வாதி, முன்னாள் முதல்வர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், இந்த நாட்டின் மிக சிறந்த பொது ஆளுமைகளில் ஒருவரின் மகள் என்ற வகையில், எந்தவொரு விசாரணை அமைப்பின் கேள்வியையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். தயாராக இருக்கிறேன் என்பதை உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன். ஆனால் செயல்முறையின் நியாயத்தன்மையை நான் வலியுறுத்துவேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.