சென்னை
நடிகர் ரஜினிகாந்த் வீட்டு வாசலில் இரட்டை இலை கோலம் போடப்பட்டதால் நெட்டிசன்கள் பரபரப்பு அடைந்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாகக் கடந்த 30 வருடங்களாக அறிவித்து வந்தார். அவரது ரசிகர்கள் பலர் இதை நம்பி எந்தக் கட்சியிலும் சேராமல் காத்திருந்தனர். சென்ற வருடம் இறுதியில் அதாவது நேற்று தனது புதிய கட்சி குறித்து அறிவிக்கப் போவதாக ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தனது உடல் நலம் கருதி அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவித்து இருந்தார். இது அரசியல் உலகில் கடும் பரபரப்பையும் அவர் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் உண்டாக்கியது. ஆயினும் அவர் அரசியல் கட்சி தொடங்காமல் ஏதாவது கட்சிக்கு ஆதரவு அளிப்பார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் அவருடைய இல்லத்தில் இன்று புத்தாண்டை முன்னிட்டு பெரிய கோலம் ஒன்று போடப்பட்டுள்ளது. அதில் இரட்டை இலை உள்ளதால் நெட்டிசன்கள் பரபரப்பு அடைந்துள்ளனர். பல அதிமுகவினர் தங்களுக்கு ரஜினி ஆதரவு அளிக்க உள்ளதாக சமூக வலைத் தளங்களில் பதிந்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.