இந்தியாவில், ஒவ்வொரு வகை கிரிக்கெட்டிற்கும் தனித்தனி கேப்டனை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை அவ்வப்போது எழுவதும், பின்னர் அப்படியே அடங்கிவிடுவதுமாக இருக்கிறது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில், இரட்டைக் கேப்டன் முறை செயல்பாட்டில் உள்ளது. அது வெற்றிகரமாகவும் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்தியாவில் மட்டும் அந்த நடைமுறை எடுபடாது என்று எப்படி முடிவிற்கு வருகிறார்கள்? டி-20 போட்டியில், ரோகித் ஷர்மா சிறந்த கேப்டன் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது, பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், அஜின்கியா ரஹானே, தான் பலவகையிலும் ஒரு சிறந்த கேப்டன் என்பதை நன்றாக நிரூபித்திருக்கிறார். அடுத்து நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், அவரின் செயல்பாடுகளை வைத்து நாம் ஒரு செம்மையான முடிவிற்கு வந்துவிடலாம்.
விராத் கோலியை, நீண்ட ஓவர் போட்டிகளுக்கு மட்டுமே கேப்டனாக நியமிக்கலாம் என்ற குரல் ஏற்கனவே ஒலித்துள்ள நிலையில், தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கு, ரஹானே வடிவில் அவருக்கு ஆபத்து வந்துவிட்டது.
கேப்டன்களை மாறிமாறி நியமிப்பதால், இந்திய கிரிக்கெட்டில் மட்டும் நிலையற்ற தன்மை ஏற்பட்டுவிடுமா? என்ற கேள்வியும் எழுகிறது.
விராத் கோலியைப் பொறுத்தவரை, திறமையும் ஆக்ரோஷமும் இருக்கிறது. ஆனால், சூழலுக்கேற்ப முடிவெடுப்பதில், பல சமயங்களில் தடுமாறுகிறார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில், அரையிறுதியில் அவர் மேற்கொண்ட முடிவுகளே அதற்கு பெரிய சாட்சி!
விராத் கோலியும் ரவி சாஸ்திரியும் சேர்ந்து, அணியில் தங்களின் ஆதிக்கம் எந்தவகையிலும் தளர்ந்துவிடக்கூடாது என்று பார்த்துக் கொள்வதில் எப்போதும் கவனமாக இருக்கிறார்கள். இதில், தேர்வுக்குழு தலைவர் பிரசாத்துக்கும் பங்கிருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, சிலரின் ஆதிக்கத்திற்காக சில முடிவுகளை மேற்கொள்வதை விட்டுவிட்டு, இந்திய கிரிக்கெட்டிற்கு எது சிறப்பானதோ, அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு!
ஆனால், இந்திய கிரிக்கெட்டில் நல்ல விஷயங்கள் உடனே நடந்துவிடுமா..!