டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற விவசாயிகள் அமைப்பு மற்றும் மத்திய அமைச்சர்கள்,அதிகாரிகள் கலந்துகொண்ட பேச்சு வார்த்தையில், விவசாயிகளின் 2 கோரிக்கைகள் ஏற்பட்டு உள்ளது.
“மின்சார அவசரச் சட்ட மசோதாவை நிறுத்திவைப்பது, வேளாண் கழிவுகளை எரிப்பவா்களுக்கு தண்டனை அளிக்கும் பிரிவில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிப்பது ஆகிய 2 கோரிக்கைகள் நேற்று ( புதன்கிழமை) நடைபெற்ற 5 மணி நேர பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 4ந்தேதி நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப், அரியாணா, உத்தர பிரதேசம் உள்பட சில வட மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக் கான விவசாயிகள், தலைநகர் டெல்லி எல்லைகளில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 35வது நாளாக தொடர்கிறது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, மத்தியஅரசு ஏற்கனவே 5முறை பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாத நிலையில், நேற்று (30ந்தேதி) 6வது கட்ட பேச்சு வார்த்தை விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இதில், 41 விவசாய சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மத்திய அரசு சாா்பில் வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், தொழில்-வா்த்தகம், உணவுப் பொருள் விநியோகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், தொழில்-வா்த்தகத் துறை இணையமைச்சா் சோம் பிரகாஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்த ஆலோசனையின்போது, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதால் ஏற்படும் சாதக-பாதகங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது ஆகியவை குறித்து மட்டுமே விவாதிக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் நிபந்தனை விதித்திருந்தன. மேலும், மத்திய அரசின் மின்சார அவசரச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால், விவசாயிகளுக்கான மின்சார மானியம், அதன் தொடா் விளைவாக இலவச மின்சாரம் ரத்தாகி விடும் எனவும் வலியுறுத்தப்பட்டது,
அதுகுறித்து விவாதிக்கப்பட்டதாகவும், குறைந்தபட்ச ஆதரவு விலையில் வேளாண் பொருள்களைக் கொள்முதல் செய்வதை சிறப்பாக அமல்படுத்துவதற்கு குழுவை அமைப்பது, விவசாயிகளின் நலன் கருதி மின்சார அவசரச் சட்ட மசோதாவை நிறுத்திவைப்பது, தேசியத் தலைநகா் காற்று தர மேலாண்மை ஆணையத்துக்கான அவசரச் சட்டம்-2020-இல் வேளாண் கழிவுகளை எரிப்பவா்களுக்கு தண்டனை அளிக்கும் பிரிவில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிப்பது போன்ற பரிந்துரை களை மத்திய அரசு தரப்பு பரிந்துரை செய்தது. மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க மின்சார அவசரச் சட்ட மசோதாவை நிறுத்திவைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தை ஜனவரி 4ந்தேதி நடைபெற உள்ளதாகவும், அப்போது, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வது ஆகிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விவசாயிகள் கொண்டு வந்த உணவை மத்திய அமைச்சா்கள் பகிா்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதுபோல விவசாயிகளும் அரசு வழங்கி உணவை பகிர்ந்துகொண்டனர்.
இதேபோன்று, தேநீா் இடைவேளையின்போது அரசு சாா்பில் அளிக்கப்பட்ட பானங்களை விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் அருந்தினா்.