சண்டிகர்: அரியானா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக  ஜெஜெபி கூட்டணி பெரும் தோல்வி அடைந்துள்ளது. அங்குள்ள மேயர் பதவிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

அரியான மாநிலத்தில் பாஜக, சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரியானா மாநிலத்திலும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரியானா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. கடந்த 27ந்தேதி மாநிலத்தில் உள்ள மூன்று மாநகராட்சி மேயர், இரண்டு நகராட்சித் தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.  அதன் வாக்குகள் எண்ணிக்கை நேற்று (30ந்தேதி)  காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து முடிவுகள் வெளியாகின.

இதில், 3 மேயர் பதவகிளில்  சோனிபட், அம்பாலா என 2 இடங்களின்  பாஜக கூட்டணி தோல்வி அடைந்து, மேயர் பதவிகளை  பறிகொடுத்துள்ளது. இந்த இரண்டு மேயர் பதவிகளையும் காங்கிரஸ் வென்றுள்ளது.

பஞ்ச்குலா மாநகராட்சி மட்டும் பாஜ கூட்டணி கைப்பற்றியது உள்ளது, அதுவும் மிகவும்  குறைவான வாக்கு வித்தியாசத்தில் போராடி வென்றுள்ளது.

மாநிலத்தின் கூட்டணி கட்சியான  துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியின் கோட்டையாக கருதப்படும்  உக்லானா, சம்ப்லா மற்றும் தாருகெராவிலும் பாஜக கூட்டணி தோல்வி அடைந்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்று அதிரடி காட்டியது பாஜ, இந்த தேர்தலில் பெரும் தோல்வி அடைந்துள்ளது பாஜ கூட்டணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

முன்னதாக, வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை மாநிலஅரசு கையாண்ட விதம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.  விவசாயிகள் மீது மாநில எல்லையில் காவல்துறையினரைக் கொண்டு அடக்குமுறை அடாவடி நடத்தியது சர்ச்சையானது. அதன் முடிவுகள் தற்போதுஉள்ளாட்சி தேர்தலில் எதிரொலித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி டிவிட்டரில்  கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஸ்ரீவத்ஸ்வா, ‘புதிய வேளாண் சட்டங்களால் பொதுமக்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளனர். அதன் எதிரொலிதான் இந்த தேர்தல் முடிவுகள்’ என்று  விமர்சித்துள்ளார்.