டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா உலக நாடுகளில் பரவி வருகிறது. இதை தடுக்கும் நோக்கில் உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தியா உள்பட பல உலக நாடுகளில், இங்கிலாந்துடனான விமான சேவை, கடல் போக்குவரத்து போன்றவற்றை நிறுத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்தியாவிலும், இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை இந்தியா திரும்பியவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு இருப்பதுடன், அவர்களை தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். அவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 6 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக நேற்று (29ந்தேதி) மத்தியஅரசு அறிவித்தது.
இந்த நிலையில், தற்போது உருமாறி யகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை பட்டியல் வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை படுத்தப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொரோனா தடுப்பு மருந்தாகிய கோவேக்சின் உருமாறிய புதியவகை கொரோனாவையும் எதிர்க்கும் தன்மை கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.