திருவனந்தபுரம்: பிரிட்டனில் இருந்து கேரளா வந்த மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி உள்ளது. இந்த தொற்று சாதாரண வைரசை விட 70 சதவீதம் அதி வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து உலக நாடுகள், பிரிட்டனுடனான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளது.
அதே நேரத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களை மத்திய அரசு கொரோனா பரிசோதனைக்கு ஆட்படுத்தியது. கிட்டத்தட்ட 33 ஆயிரம் பேரை பரிசோதித்ததில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இந் நிலையில், பிரிட்டனில் இருந்து கேரளா வந்த மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா கூறி இருப்பதாவது:
பிரிட்டனில் இருந்து கேரளா வந்தவர்களில் மேலும் 10 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம், பிரிட்டனிலிருந்து வந்தவர்களில் மொத்தமாக 18 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. அவர்கள், உருமாறிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய அவர்களின் மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.