சென்னை: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு சம்பந்தமாக நீதிபதி குலசேகரன் தலைமையில் தமிழக அரசு ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. இந்த ஆணையம் செயல்படத் தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக நீதிபதி குலசேகரன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அரசு பணியில் வன்னியர்களுக்கு 20சதவிகித இடஒதுக்கீடு கோரியும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரியும் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
இதையடுத்து, அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்தவும், 69% இட ஒதுக்கீடு வழக்கை எதிர்கொள்ளவும் தற்போதைய நிலவரப்படி சாதிவாரியான புள்ளி விவரங்களை திரட்டி அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் குலசேகரன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 7-ந்தேதி அறிவித்து அதற்கான அலுவலகமும் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் ஒதுக்கப்பட்டு, அவருடன் பணியாற்றும் அதிகாரிகளின் பட்டியலையும் வெளியிட்டது.
அதைத்தொடர்ந்து, ஆணையத்தின் தலைவராக நீதிபதி ஏ.குலசேகரன் கடந்த 21-ந்தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தநிலையில் புதிய அலுவலகத்தில் நீதிபதி குலசேகரன் தனது பணியை தொடங்கினார். சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகளை எந்த அடிப்படையில் மேற்கொள்ளலாம் என்பது குறித்து பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் அதுல் ஆனந்த், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை இயக்குனர் மதிவாணன், தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை இயக்குனர் ரஜினிகாந்த் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நீதிபதி குலசேகரன், கடந்த 1970-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டநாதன் ஆணையம், 1985-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அம்பாசங்கர் ஆணையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது, எந்த அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகளை மேற்கொண்டால் அதை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பது குறித்தும் ஆலோசித்தம்.
இதுதொடர்பாக அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோரிடம் இருந்து மனுக்கள் பெறவும், மாவட்டம்தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். தேவைப்பட்டால் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். இந்த கணக்கெடுப்பின்போது புலம் பெயர்ந்தவர்களின் விவரங்களும் சேகரிக்கப்படும். 6 மாதத்துக்குள் ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.