மும்பை
மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் உறவு மோசமாகி வருவதால் மாநிலங்கள் சோவியத் யூனியன் போல சிதறுண்டு போகும் என சிவசேனா விமர்சித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன் தேர்தலில் கூட்டணி வைத்திருந்த சிவசேனா கருத்து வேறுபாடு காரணமாக தேர்தலுக்கு பிறகு கூட்டணியை முறித்துக் கொண்டது. தற்போது இக்கட்சி காங்கிரஸ், மற்றும் தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. சிவசேனா ஆட்சியைப் பிடித்ததில் இருந்து மத்திய அரசு மோதல் மனப்பான்மையுடன் நடந்து வருகிறது.
சிவசேனா கட்சியின் அதிகாரபுர்வ நாளேடான சாம்னாவில் வெளி வந்துள்ள ஒரு செய்திக் கட்டுரையில் ”சமீபத்தில் பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா பரபரப்பான பேட்டி அளித்துள்ளார். அவர், மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கப் பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தினார் என தெரிவித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசைக் கவிழ்க்கச் சிறப்பு கவனத்தைப் பிரதமர் எடுத்துக் கொண்டாரா என்ன? நாடு முழுமைக்கும் உரித்தானவர் பிரதமர். திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜியை மேற்கு வங்கத்தின் ஆட்சி அதிகாரத்திலிருந்து இறக்க மத்திய அரசு முயன்று அதில் தோல்வி அடைந்து வருகிறது. அரசியல் தோல்வி என்பது ஜனநாயகத்தில் சாதாரணமானது.
இருப்பினும் மத்திய அரசு அந்த தோல்வியைத் தாங்காமல் மம்தா அரசை வெளியேற்ற முயல்வது வேதனையாக உள்ளது.. மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும், இடையிலான உறவு மிகவும் மோசமாகி, கவலையளிக்கும் விதத்தில் இருந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால், சோவியத் யூனியன் போல் மாநிலங்கள் சிதறுண்டுபோக நீண்டகாலம் ஆகாது’” எனக் கூறப்பட்டுள்ளது.