கொல்கத்தா: விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பும் வேளையில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லியில் லட்சக்கணக்கான வட மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந் நிலையில் போராடும் விவசாயிகளை சந்திக்காமல் போராட்டத்தை திசை திருப்பும் வேளையில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: விளைபொருட்களுக்கு ஆதாய விலை நிர்ணயம் செய்வதை நீர்த்து போகச் செய்யும் அம்சங்கள் புதிய வேளாண் சட்டங்களில் உள்ளன.
விளைபொருட்களை மாநில அரசுகள் கொள்முதல் செய்வதை தடுக்கும் அம்சங்களும், புதிய வேளாண் சட்டத்தில் உள்ளது. இந்த சட்டங்கள் மூலமாக தனியாரிடம் விவசாயிகள் கையேந்தும் நிலை ஏற்படும்.
தொலைக்காட்சியில் தோன்றி விவசாயிகளுக்காக கவலைப்படும் மோடி பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண முன் வரவில்லை. விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிதியுதவி திட்டத்தை மேற்கு வங்க அரசு தடுக்கவில்லை என்று தெரிவித்து உள்ளார்.