சென்னை:
குளிர், கொசுக்கடி உடன் எலித்தொல்லை ஆகியவற்றில் சென்னை கடும் அவதி உள்ளாகி வருகின்றனர்.
‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ எனும் அடுத்தடுத்த புயல்கள் காரணமாகவும் கடந்த மாதம் இறுதியில் இருந்து இம்மாதம் முதல் வாரம் வரை சென்னையில் மழை கொட்டியது.
இரவில் குளிரின் தாக்கம் மிகுதியாகவே இருக்கிறது. இதனால் குளிரை தாங்கவல்ல ஸ்வெட்டர்கள், போர்வைகளை மக்கள் தங்கள் வீடுகளில் வாங்கி வைத்துவிட்டார்கள். இரவில் குளிருகிறதே என்று மின்விசிறியை ஆப் செய்துவிட்டால் போதும், ‘என்னை மறந்துவிட்டீர்களா?’, எனும் ரீதியில் கொசுக்கள் படையெடுத்து விடுகின்றன.
ஊசி போல குத்தி கடிக்கும் கொசுக்களால் இரவில் தூக்கம் என்பதே சிக்கலாகி விடுகிறது. கொசுக்களை விரட்ட மின்விசிறியை போட்டால் குளிரால் நடுங்க வேண்டியது உள்ளது. குளிராலும், கொசுக்கடியாலும் சென்னைவாசிகள் இரவு நேரங்களை மிகவும் சிக்கலாகவே கடக்க வேண்டியதுள்ளது என்றால் அது மிகையல்ல. என்னதான் கொசுவிரட்டிகளை பயன்படுத்தி பார்த்தாலும் கொசுக்களின் சேட்டைக்கு அணை போடவே முடியவில்லை. இதனால் வீடுகள் தோறும் இரவு நேரங்களில் கொசு பேட்களின் ‘சட்… சட்…’ சத்தம் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு வீடுகளிலும் செல்போனுக்கு ‘சார்ஜ்’ கொடுக்கிறார்களோ இல்லையோ, எந்நேரமும் ‘சார்ஜ்’ ஏறிய மயமாகவே கொசு பேட்கள் காட்சி அளிக்கின்றன. தன்னை கடிக்க வரும் கொசுக்களை, ‘கொசு பேட்’ கொண்டு கொல்வதில் மக்களின் ஆர்வத்தை பார்க்க முடிகிறது.
இது ஒருபுறம் என்றால் இன்னொருபுறம் ‘நானும் இருக்கிறேன் பார்’ எனும் ரீதியில் எலிகளின் அட்டகாசம் அதிகரித்திருக்கிறது. தற்போது எலிகளின் தொல்லை பெரும் தொல்லையாக மாறிவிட்டது. சமையலறைகளில் பாத்திரங்களை தள்ளிவிட்டும், காய்கறி-பழங்களை கடித்து விட்டும் செல்லும் எலிகள் பெரும் அவதியை மக்களுக்கு தந்து வருகிறது. இரவில் ‘கீச்… கீச்…’ எனும் எலிகளின் சத்தமும் மக்களை தூங்கவிடாமல் செய்துவருகிறது.
இதனால் எலிகளை அடித்து கொல்லவேண்டும் எனும் ரீதியில் கையில் கிடைத்த பொருளுடன் இரவு தூக்கத்தை கெடுத்து மக்கள் எலிவேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். எலிகளை தேடி அவ்வப்போது பூனைகளும் வருவதால் என்ன செய்வது என்றே தெரியாமல் மக்கள் புலம்புகிறார்கள். கொசுத்தொல்லைக்கு பயந்து கொசுவலைகளையும், எலிகளை பிடிக்க எலிக்கூண்டுகளையும், எலி மருந்துகளையும் மக்கள் ஆர்வமுடன் கடைகளில் வாங்கி வருகிறார்கள்.
கடும் குளிர், கொசுக்கடி, எலித்தொல்லை என்ற மும்முனை தாக்குதலில் சிக்கி தினந்தோறும் சென்னைவாசிகள் அல்லல்படுகிறார்கள். கொசுக்கடியால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பிரச்சனைகளும் வந்துவிடும் என்பதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். பொதுவாகவே மழைக்காலங்களில் கொசுக்களை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் கொசுமருந்து தெளிக்கப்படும். கொசுக்களை ஒழிக்க புகை வழியாகவும் மருந்து அடிக்கப்படும்.
ஆனால் இந்தமுறை மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணிகள் ஆர்வம் காட்டப்படவில்லை என்றும், குடியிருப்பு பகுதிகளில் தினந்தோறும் கொசு மருந்து தெளிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் சென்னை மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குடிநீர் பிரச்சனை, கொரோனா, மழைவெள்ளம் என அடுத்தடுத்த சிக்கல்களை எதிர்நோக்கி சமாளித்து வரும் சென்னைவாசிகள், இந்தமுறை இந்த மும்முனை தாக்குதலிலும் தப்பி பிழைக்க போராடி வருகிறார்கள் என்பதே உண்மையாக இருக்கிறது.