ஈரோடு:
இந்த ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் நம்பியூர் சாவக்கட்டுபாளையத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். இதுவரை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 52 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். தலைமை ஆசிரியர்களுக்கு மடிக்கணினிக்கு பதிலாக ஸ்மார்ட்போன் வழங்கினால் தற்போதுள்ள பாடத்திட்டத்தை முழுமையாக அவர்களால் பின்பற்ற முடியாது. செல்போன், டேப் தரம் குறைவானதாக இருப்பதால் அதை மாணவர்களுக்கு வழங்குவதில்லை. அடுத்த ஆண்டு அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்க உள்ள மாணவர்களுக்கு மருத்துவப்படிப்புக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதல்-அமைச்சரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அம்மா ஊரக விளையாட்டு திட்டத்தின் கீழ் ரூ.64 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி 75 சதவீதம் முடிவடைந்துள்ளது.
மீதமுள்ள பணிகள் ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகள் மூலம் இடம் தேர்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.