மதுரை: பாஜக தேசிய கட்சி என்பதால், கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அக்கட்சியின் தேசிய தலைவர் அறிவிப்பார் என்று கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை அவர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: நாளை நடைபெறும் அதிமுக பிரசார பொதுக்கூட்டம் 2021ம் ஆண்டு தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் கூட்டமாக அமையும். 10 ஆண்டுகளில் தமிழகத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றியுள்ளோம்.

தங்கத்தை தோண்டி எடுக்கும் நாடுகளில்கூட தாலிக்கு தங்கம் வழங்கியது கிடையாது. ஆனால், தமிழகத்தில் மட்டுமே தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளில் கந்து வட்டி, கட்ட பஞ்சாயத்து ஒழிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் சட்டமன்றத்திலும் எதிரொலிக்கும் என பார்ப்பது தவறு.

1980ல் நாடாளுமன்றத்தில் அதிமுக 2 இடங்களை மட்டுமே பிடித்தது. ஆனால், சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சியை பிடித்தது. அதேபோல் இந்த தேர்தலிலும் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்றார். அப்போது, கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமைதான் அறிவிக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் மேலும் கூறியதாவது: பாஜகவை பொறுத்தவரை, தேசிய கட்சி என்பதால், அவர்களின் கொள்கைப்படி கட்சியின் தேசிய தலைவர்தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார். கூட்டணியில் மாநில கட்சிகள் மட்டும் இருந்தால்  அந்த கட்சிகள் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கலாம். ஆனால், மாநில கட்சிகளோடு தேசிய கட்சிகள் இருக்கும் போது, முதல்வர் வேட்பாளரை தேசிய கட்சி தான் அறிவிக்கும் என்றார்.