சென்னை: இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சியின் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பேசிய மூத்த தலைவர் நல்லக்கண்ணு, போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்கவும் போராட வேண்டியுள்ளது. அரசியல் சட்டத்திற்கு தற்போது ஆபத்து வருகிறது அது பாதுகாக்கப்படுமா? என்று வேதனை தெரிவித்தார்.
தமிழக அரசியல் தலைவர்களில் தற்போது மூத்த தலைவராக இருப்பவர் இந்திய கம்யூனிஸ்டுகட்சியைச் சேர்ந்த நல்லக்கண்ணு. இன்று அவருக்கு 96வது பறிந்தநாள். இதையொட்டி அவருக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நல்லக்கண்ணுவை சந்தித்து வாழ்த்தினார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர்; தொண்டறமே வாழ்வெனக் கொண்டவர். எளிமை-தியாகம்-நேர்மை இவற்றின் இலக்கணமாக அரசியல் கடலின் கலங்கரை விளக்கமாக இருந்து ஒளியூட்டி வழிகாட்டும் பெருந்தோழர் அய்யா நல்லகண்ணு அவர்கள் பிறந்தநாளில் நேரில் சந்தித்து கழகத்தின் சார்பில் வாழ்த்தி மகிழ்ந்தேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில், “இன்று பிறந்தநாள் காணும் விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான மரியாதைக்குரிய திரு.நல்லக்கண்ணு ஐயா அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் மகிழ்ச்சியோடு வாழ இறைவனை வேண்டி, எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.