சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பூலோக வைக்குண்டமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில், சென்னை திருவல்லிக்கேணி திருவிழா பார்த்தசாரதி சுவாமி கோவில் உள்பட நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் எம்பெருமானார் கோவிலில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாக, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் விழா நடைபெறும் இந்த விழாவில் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார். பகல் பத்து உற்சவத்தின் போது உற்சவர் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின் போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களுடன் எழுந்தருளி சேவை சாதிப்பார்.
ஸ்ரீரங்கம் கோவிலில் நாலாயிரம் திவ்வியபிரபந்தம் படிக்க ஆரம்பித்தவுடன் மற்ற திவ்விய தேசங்களில் இருந்து பெருமாள்கள் அனைவரும் இங்கு எழுந்தருள்கின்றனர் என்பது ஐதீகம். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 14-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் போது, தினமும் நம்பெருமாள் ஒவ்வொரு அலங்காரத்தில் அர்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். இதையடுத்து, நாளை அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். அப்போது நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சொர்க்கவாசல் 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரையிலும் திறந்திருக்கும்.
31-ந் தேதி மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நம்பெருமாள் பரமபத வாசல் கடந்து, திருமாமணி மண்டபம் எழுந்தருளிய பிறகு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இரவு 8 மணிக்கு மேல் சேவை கிடையாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்
108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த திருத்தலமாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விளங்குகின்றது. மேலும் ஸ்ரீபேயாழ்வார், ஸ்ரீ திருமழிசையாழ்வார், ஸ்ரீ திருமங்கையாழ்வார் ஆகிய எம்பெருமான்கள் கோவிலில் எழுந்தருளி உள்ள ஸ்ரீபார்த்தசாரதி பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்கள். இதனால் பார்த்தசாரதி கோவிலும் மிகவும் பிரசித்திப் பெற்றது.
நாளை வைகுண்ட ஏகாதசி திருவிழாவினை, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், தினசரி 3ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் காலை 6.15 மணி முதல் இரவு 8.00 மணி வரை பக்தர்கள் எம்பெருமானை தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மூலமாக இலவச முன்பதிவு செய்த 3000 நபர்கள் திருக்கோயிலின் கிழக்கு கோபுர வாசல் வழியாக திருக்குளத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள வரிசையில் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
.100 காணிக்கை கட்டணச் சீட்டு வாங்கியவர்கள், மேற்கு கோபுர வாசல் வழியாக காலை 6.15 மணி முதல் இரவு 8 மணி வரை தெற்கு மாடவீதி வழியாக அமைக்கப்பட்டுள்ள க்யூ வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
மேற்கு கோபுர வாசல், பேயாழ்வார் கோயில் தெரு வழியாக அமைக்கப்பட்டுள்ள க்யூ வரிசையில், பரமபத வாசல் மட்டும் தரிசனம் செய்ய காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதிக்கப்படுவர்.
திருக்கோயிலின் உட்பகுதியில் அதிகாலை நடைபெறும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியினை சேவார்த்திகள் காண்பதற்காக திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் எல்இடி வீடியோ திரை அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாக 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதயநோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள் கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல மாநிலம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பின்போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.