டெல்லி: இங்கிலாந்தில் இருந்து டெல்லி வந்த விமான பயணிகளில் இதுவரை 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு புதிய வகையிலான உருமாறிய கொரோனா தொற்றா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் வியாபித்துள்ள கொரோனா தொற்று தற்போது சற்றே கட்டுக்குள் வந்த நிலையில், இங்கிலாந்து உள்பட தென் ஆப்பிரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது. இது கொரோனாவின் 2வது அலை என கூறும் மருத்துவ நிபுணர்கள், அதன் வேகம் சாதான பரவலைவிட 70 சதவிகிதம் அதிகம் என்று தெரிவித்து உள்ளனர். இது உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, உலக நாடுகள் இங்கிலாந்துடனான அனைத்து போக்குவரத்து நடவடிக்கைகளையும் முடக்கி உள்ளன. இந்தியாவிலும் நேற்று நள்ளிரவு முதல் விமான சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து டெல்லி வந்த விமான பயணிகளில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி டெல்லியைச் சேர்ந்த 11 பேருக்கும், அமிர்தசரஸ் பகுதியில் 8 பேருக்கும், கொல்கத்தாவில் 2 பேருக்கும், சென்னையில் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுடன் தொடர்புடைய நபர்கள், விமானத்தில் பயணித்த மற்ற நபர்களையும் கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அவர்கள் 22 பேருக்கும் புதியவகை உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளதா? என தெரியவில்லை. அதனை கண்டறிவதற்காக அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம் மற்றும் சளி மாதிரிகள், அடுத்தகட்ட பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள தேசிய தொற்றுநோய் கட்டப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.