வாஷிங்டன்
ஜோ பைடன் தேசிய பொருளாதாரக் குழுவின் துணை இயக்குநராக நியமனம் செய்துள்ள பரத் ராம மூர்த்தி குறித்த விவரங்கள் இதோ
அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தேசிய பொருளாதார குழுவின் துணை இயக்குநராக இந்திய வம்சாவளியினரான பரத் ராமமூர்த்தி என்பவரை நியமித்துள்ளார். இவருடன் கூடுதல் உறுப்பினர்களாக ஜோயல் கேம்பிள், டேவிட் காமின் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முன்னாள் அதிபர் ஒபாமாவின் பொருளாதார ஆலோசகர்களாக பணி புரிந்தவர்கள் ஆவார்கள்.
இந்த நியமனம் குறித்து பரத் ராமமூர்த்தி தனது டிவிட்டரில், “எனக்குத் தேசிய பொருளாதாரக் குழுவின் துணைத் தலைவர் பதவி அளித்து பைடன் – கமலா ஹாரிஸ் நிர்வாகம் கவுரவித்துள்ளது. தற்போது எங்களுக்கு நியாயமான மற்றும் வலுவான பொருளாதாரம் அமைக்கும் பொறுப்பு உள்ளது. இந்த குழுவுடன் நானும் இணைவதில் மிகவும் மகிழ்கிறேன்” எனப் பதிந்துள்ளார்.
பரத் ராமமூர்த்தி இந்திய வம்சாவளியினர் ஆவார். இவர் ஹார்வர்ட் கல்லூரி மற்றும் யேல் சட்டக் கல்வி நிறுவனம் ஆகியவற்றில் பட்டப்படிப்பு படித்தஆற் ஆவார். இவர் ரோஸ்வெல்ட் கல்வி நிலையத்தில் நிர்வாக இயக்குநராக பணி புரிந்து வருகிறார். இவர் மூத்த செனட் உறுப்பினரான எலிசபெத் வாரன் இடம் 7 வருடங்கள் பொருளாதார ஆலோசகராகப் பணி புரிந்துள்ளார். மேலும் அமெரிக்காவின் கொரோனா வைரஸ் உதவி ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
பரத் ராமமூர்த்தியின் தந்தையான ரவி ராமமூர்த்தி தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர் ஆவார். இவர் தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்று குடியுரிமை பெற்றவர ஆவார், துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தமிழக வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.