தமிழகத்தில் 16வது சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அதிமுகவும், ஆட்சியைப் பிடித்தே ஆக வேண்டும் என்று திமுகவும் கோதாவில் இறங்கி உள்ளன.
திமுகவின் ஆளுமைமிக்க தலைவரான கருணாநிதி, அதிமுகவின் ஆளுமையான ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள், களத்தில் இல்லாத நிலையில், நடைபெற உள்ள முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால், அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அடுத்த முதல்வர் தான்தான் என்று மு.க.ஸ்டாலின் கனவில் மிதக்க மற்றொரு புறம் எடப்பாடி பழனிச்சாமி தான்தான் மீண்டும் முதல்வர் ஆவேன் என்று கூறி வருகிறார். இதற்கிடையில், பாஜகவோ தன் பங்குக்கு அதிகாரப் பலத்தைக்கொண்டு கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் 257 கட்சிகள் உள்ள நிலையில், ரஜினி, தன் பங்குக்கு கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்து உள்ளார். ஆனால், தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்ட கட்சிகள் 10 மட்டுமே.
இதுபோன்ற சூழலில்தான் தமிழக சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்போதே தமிழகஅரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கமல்ஹாசனும் தனது பங்குக்கு காய் நகர்த்தி வருகிறார். தமிழக அரசியலில் நடிகர்களின் தாக்கமும் அவ்வப்போது உருவாகி, பரபரப்பை ஏற்படுத்தி வருவதில் வியப்பேதும் இல்லை. ஆனால், தமிழக அரசியலில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை தவிர்த்து வேறு எவரும் ஜொலிக்காத நிலையிலும், பல நடிகர்கள் அரசியலில் குதிக்கப்போவதாக கூறி தங்களது ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார்கள்.
அதன் எதிரொலிதான், திரையுலகில் இருந்து துரத்தப்பட்டு ஓய்வுபெற்று, தள்ளாடும் வயதில் அரசியல் கட்சி என்ற பெயரில் களம் காண வருகின்றனர் கமல், ரஜினி போன்றோர். இவர்களின் அரசியல் மற்றும் அதிகார போதை காரணமாக, திரையுலகில் சம்பாதித்த கோடிக்கணக்கான கருப்பு பணத்தை, வெள்ளையாக மாற்றும் முயற்சியாகவே தேர்தல் களம் புகுகின்றனர் என்பதையும் மறுக்க முடியாது.
தமிழக சட்டமன்ற தேர்தல், இன்னும் 5 மாதங்களில், 5 நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் இப்போதே தகதகவென தீப்பிழம்பாக ஜொலிக்க தொடங்கி உள்ளது.
திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ள நிலையில், கமல்ஹாசனும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். எம்ஜிஆர் கட்சித்தொடங்கிய மதுரையிலேயே தனது முதல்பிரசாரத்தை தொடங்கியதுடன், எம்ஜிஆர் பெயரை கூறிக்கொண்டு ஆட்சி செய்து வரும் அதிமுக மீது சேரை வாரி பூசி வருகிறார்.
ஆளும் அதிமுகவை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக தாக்கி பேசியும், ஆட்சியின் அவலங்களை தோலூரித்து காட்டி வரும் நிலையில், கமல்ஹாசனும் தனது பங்குக்கு, அதிமுக அரசை கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார்.
முதல்வர் எடப்பாடி உள்பட அதிமுக அமைச்சர்கள் அனைவரையும் சகட்டுமேனிக்கு விமர்சிக்கும், கமல்ஹாசன், கூவத்தூரில் ஆரம்பித்த கூத்தால் இன்று ஊரே கூவமாக மாறிவிட்டது என்று எடப்பாடி அரசை வறுத்தெடுத்து வருகிறார்.
கமல்ஹாசனின் விமர்சனத்துக்கு முதல்வர் எடப்பாடி உள்பட அமைசசர்கள், அதிமுக தலைவர்கள் என பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். உச்சக்கட்டமாக அதிமுக நாளேடு, கமலஹாசனை கடுமையாக விமர்சித்தது.
கட்சி தொடங்கிய காலத்தில் திராவிட கட்சிகளை கடுமையாக சாடிய கமல்ஹாசன், இந்த தேர்தல் பிரசாரத்தில், அதிமுகவை மட்டுமே கடுமையாக தூற்றுவதும், திமுகவை விமர்சிக்க தயங்குவதும் அரசியல் நோக்கர்களின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.
தமிழகத்தில்,, ஊழல் செய்வதில், அதிமுக, திமுக கட்சிகளுக்கு இடையே வேறுபாடு பார்க்க முடியாது, இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் எனும்போது, கமல்ஹாசன் திமுகவை விமர்சிக்க மறுப்பதும், அதுபோல, கமல்ஹாசனையோ, கமல் கட்சியையோ திமுக விமர்சிக்காமல் மவுனம் காப்பதும் , இது கூட்டணிக்கான அச்சாரமோ என்ற சந்தேகப் பார்வையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சந்தேகம், கமல்ஹாசனின் சமீப கால அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தெரிந்துகொள்ள முடியும். திமுகவுடன் மநீம கைகோர்க்கிறதோ என்ற எண்ணத்தை உருவாக்க வைத்துள்ளது.
ஜெ. முதல்வராக இருந்தபோது, அவரை எதிர்க்க முடியாமல், தமிழகத்தை விட்டே போகப்போகிறேன் என்று ஒப்பாரி வைத்த இதே கமல்ஹாசன்தான், ஜெ.மறைவை இரங்கல் என்ற பெயரில் வசை பாடியிருந்தார். அவரது மறைவை, சான்றோருக்கு இரங்கல் என்று கூறி, ஜெயலலிதாவின் மரணத்தையே அடிமனதினுள் கொண்டாடியவர் உத்தம வில்லனான கமல்ஹாசன் என்பதை யாரும் மறுக்க முடியாது.
தற்போதைய நிலையில், அதிமுகவில் வலிமையான தலைமை இல்லை என்பதை உணர்ந்தே, பாஜக, பாமக, தேமுதிக உள்பட அதிமுக கூட்டணி கட்சிகள் தங்களுக்கு இத்தனை தொகுதி வேண்டும் என ஆளாளுக்கு மிரட்டி வரும் நிலையில், சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கி அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் கமல்ஹாசன்.
மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்கள் குறித்து கடுமையாக பேசும் கமல்ஹாசன், பல சந்தர்ப்பங்களில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது.
கமல்ஹாசன் இதுபோன்ற செயல்கள், அவர் திமுக கூட்டணியில் சேருவார் என்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது. ஏனென்றால், , திமுக தலைவர்களும், கமல்ஹாசனை விமர்சிப்பதில்லை என்பதும் ஊரறிந்த விஷயம்.
ரஜினி அரசியல் குறித்து கருத்து தெரிவிக்கும் திமுக, கமல்ஹாசன் அரசியல் குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பதும், திமுகவைப் போலவே கமலும் அதிமுக ஆட்சியை கடுமையாக விமர்சிப்பதும் அரசியல் ஆய்வாளர்களிடையே பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கமல் கட்சியை விமர்சிக்கக்கூடாது என்று, திமுக தலைமையிடத்தில் இருந்து, கட்சி நிர்வாகிகளுக்கு, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது, தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில், அதிமுகவுக்கு எதிரான களத்தில், திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கைகோர்த்து இருப்பது போன்ற சூழலை ஏற்படுத்தி வருகிறது.
திராவிட கட்சிகளுக்கு எதிரானது தனது கட்சி என்று கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், தமிழக இடைத்தேர்தல்களில் போட்டியிடாமல், ஒதுங்கிய நிலையில், 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியது. 36 தொகுதிகளில் போட்டியிட்டு, அதிமுக, திமுகவை அடுத்து 3வது இடத்தை பெற்றது. அதாவது, தோல்வியை சந்தித்தாலும், 3.63 % வாக்குகளை பெற்றிருந்ததை மறுக்க முடியாது. இதனால் கமல்ஹாசன் கட்சிக்கு மக்களிடையே வாங்கு வங்கி உருவாகி இருப்பது உறுதியானது.
ஆனால், தமிழகத்தை பொறுத்த வரையில், மக்கள் வாக்கு விகிதம், பாராளுமன்ற தேர்தலில் ஒரு மாதிரியாகவும் சட்டமன்ற தேர்தலில் வேறு மாதிரியாக இருந்து வருவதையும் மறுக்க முடியாது.
இருந்தாலும், தங்களின் வாக்கு வங்கி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பில், தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி உள்ள கமல்ஹாசன், அதற்காக முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தையும் வெற்றிகரமாக முடித்துவிட்டார்.
மநீம கட்சியின் வாங்கி வங்கியை தங்களுக்கு ஆதரவாக மாற்ற திமுக முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், திமுகவுக்கு ஏற்கனவே இருக்கும் வாக்கு வங்கியுடன் மக்கள் நீதி மய்யத்தின் வாக்குவங்கியும் இணைந்தால், திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. திமுக 100ஐ நெருங்கிய நிலையில், தோல்வியை பறிகொடுத்தது. இதற்கு காரணமாக, தேர்தலில் நிலவிய பலமுனைப் போட்டி என்பது தெளிவானது. வாக்குகள் சிதறியதால் திமுக தோல்வியை சந்தித்தது என்பதும் மறுப்பதற்கில்லை.
இந்த சூழலில்தான் கமல்ஹாசன், ரஜினி, என ஆளாளுக்கு கட்சியைத் தொடங்கும் திரையுலகினர், இளைஞர்களின் வாக்குகளை பிரித்துவிட்டால், திராவிடக் கட்சிகளின் வாக்குகளும் சிதையும் என்பதையும் மறுக்க முடியாது.
இந்த வாக்கு வங்கியை தங்களுக்கு சாதகமாக மாற்றும் சாணக்கியத்தனமாகவே, மக்கள் நீதி மய்யம் கட்சியை, திமுக ஆதரவு கட்சியாக மாற்றும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், கமல்ஹாசனோ, டிசம்பர் முதல்வாரத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது, சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாகவும், ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவருடன் கூட்டணி அமைக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில்தான் சில தினங்களுக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் ஓர் தனியார் இடத்தில் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது.
ஆனால், உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசியதாக வரும் தகவல்கள் குறித்து, கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு, சரியான பதிலை தெரிவிக்காமல், எப்போதும் போல குழப்பமான பதிலை தெரிவித்துவிட்டு எஸ்கேப்பாகி விட்டார் கமல்.
ஆனால், உதயநிதி கமல் சந்திப்பின்போது, சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம் பெறுவது குறித்த பேச்சு வார்த்தைக்கான தொடக்கம் எனவும் ஆழ்வார்பேட்டை வட்டார தகவல்கள் தெரிவித்தன.
இந்த கூட்டணிக்கு பின்னணியில் இருப்பது ஐபேக் நிறுவனம் என்றும் கூறப்படுகிறது. திமுகவின் தேர்தல் பிளானராக உள்ள, பிரசாந்த் கிஷோர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், மேலும், மேற்குவங்க முதல்வர் மம்தா தரப்பும் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. மம்தா திமுகவுக்கும், கமல்ஹாசனுக்கும் நம்பிக்கைக்கு உரியவர் என்பது அனைவரும் தெரியும்.
கமல்ஹாசன் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்கு உரியவர் மட்டுமின்றி, பிரசாந்த்கிஷோரின் நண்பர் என்பதையும் மறுக்க முடியாது.
அதுபோல, திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறும் என்பதையும் மறுக்க முடியாது…