டில்லி
விரைவில் சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து 5 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்திய அரசு வாங்க உள்ளது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. எனவே கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. ஏற்கனவே உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தியாவுக்கு சில மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளுக்கு அனுமதி அளிக்கக் கோரி விண்ணப்பித்துள்ளன.
இதில் புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு முதல் உரிமை வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ள கொரோனா தடுப்பூசி ஒரு பிரிட்டன் – ஸ்வீடிஷ் தயாரிப்பாகும். இம்மருந்து ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனத்துடன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே பிரிட்டன் அரசுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அனுமதி கிடைக்கலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.
அந்த அனுமதியின் அடிப்படையில் இந்தியாவும் அனுமதி அளிக்க உள்ளதாக தக்வலக்ள் தெரிவிக்கின்றன. அவ்வாறு அனுமதி அளித்த உடன் சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து மத்திய அரசு இந்த கொரோனா தடுப்பூசிகள் 5 கோடி டோஸ்கள் வாங்க ஒப்பந்தம் இட உள்ளதாக ஓர் செய்தி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் நிகழ்ந்த உடன் இந்த தடுப்பூசி போடுவதன் தொடக்கம் குறித்து பிரதமர் மோடி அறிவிப்பார் எனவும் அந்த தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.