சென்னை: பிரிட்டனில் இருந்து, டெல்லி வழியாக சென்னை வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்தில் புதியவகையிலான கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த தொற்றானது சாதாரண வைரசை விட 70% வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து உலக நாடுகள், இங்கிலாந்துக்கு விமானம் மற்றும் கப்பல் சேவைகளை நிறுத்தி இருப்பதுடன், தங்களது நாடுகளிலும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளன. பல நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், லண்டனில் இருந்து டெல்லி வழியாக இன்று சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில், ஒரு பயணிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னை விமான நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அவர் கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
லண்டனில் இருந்து வந்தவர்களுக்கு பரிசோதனை செய்தபோது முதலில் நெகட்டிவ் என்று வந்தது. ஆனால், பயணிகளுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டபோது ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு புதியவகை கொரோனா பரவியுள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட உள்ளது. புதிய வகை வைரஸ் பற்றி அறிகுறி தெரிந்தால் புனேயில் உள்ள என்.ஐ.டி.க்கு அனுப்பி உறுதி செய்வோம். அதுவரை நோயாளியை கண்காணித்து இங்கேயே குணப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம். அவருடன் பயணித்த எஞ்சிய பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதாக இங்கிலாந்து அரசு கூறியுள்ளது. ஆனால் அது பற்றி ஆதாரப்பூர்வமான தகவல் இல்லை. ஆனாலும் அதில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கையை மத்திய-மாநில அரசுகள் எடுத்துள்ளன.
பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். பொதுமக்கள் முககவசம் அணிவது, தனி மனித இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும், விமான நிலையங்களிலும், பணி செய்யும் இடங்களிலும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் கொரோனா பாதித்தவர்களுடன் பழகியவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 4, 5 நாட்களாக அறிகுறி இருப்பவர்களும் பரிசோதனை செய்வது அவசியம்.
கடந்த 10 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு 1078 பேர் பயணம் செய்ததை இ-பாஸ் மூலம் எடுத்து அவர்களுக்கு அறிகுறிகள் இருக்கிறதா என்று நாங்கள் பரிசோதித்துள்ளோம். டெல்லியில் இருந்து நேற்று 533 பேர் விமானத்தில் சென்னை வந்தனர். அவர்களுக்கு பரிசோதித்ததில் எந்த அறிகுறியும் இல்லை. இருந்தாலும், கடந்த 10 நாட்களுக்குள் இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகளை கண்டுபிடித்து பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம் என்று கூறினார்.
மேலும், ஒவ்வொரு விமான நிலையத்திலும் பயணிகள் பரிசோதனையை 24 மணி நேரமும் நாங்கள் தயாராக வைத்துள்ளோம். இதை பயணிகள் அனைவரும் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். 83 சதவீத கொரோனா பரிசோதனையை அரசு ஆய்வு கூடத்தில் தான் செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.