ஸ்ரீபெரும்புதூர்:

டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக, படப்பிடிப்பில் பணிபுரிந்த சக நடிகர்களிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார்.

டி.வி. நடிகை சித்ரா திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் ஓட்டலில் கடந்த 9-ந்தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 14-ந்தேதி கைது செய்து பொன்னேரி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், நடிகை சித்ரா தற்கொலை குறித்து காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை செய்து வருகிறார். சித்ராவின் தாய், தந்தை, சகோதரி, சகோதரர், மற்றும் ஹேம்நாத்தின் பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை நடத்திய நிலையில், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை சிறையில் இருந்து அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.

3 கட்டமாக நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர், சித்ராவின் உடன் நெருங்கிய வட்டாரங்களில் விசாரிக்க ஆர்.டி.ஓ., திவ்யஸ்ரீ முடிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று சித்ரா தற்கொலை செய்து கொண்ட விடுதியின் ஊழியர்கள், அவருடன் இறுதியாக படப்பிடிப்பில் கலந்து கொண்ட சகநடிகர்கள், வீட்டின் அருகில் வசிப்பவர்கள் உள்ளிட்ட சித்ராவிற்கு நெருக்கமானவர்களிடம் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை நடத்தினார். நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய விசாரணை சுமார் 7 மணிநேரம் நடைபெற்றது.