பெங்களூரு

கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்கு ரத்து செய்த அரசு உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது

கர்நாடக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இந்த வழக்குகள் சட்ட அமைச்சர் மதுசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் சிடி ரவி, வேளாண் அமைச்சர் பாட்டில், உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்டுள்ளன.  இவர்களைத் தவிர சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதும் பல வழக்குகள் என மொத்தம் 61 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான தற்போதைய பாஜக அரசு இந்த வழக்குகளை குற்றவியல் நடைமுறை விதி எண் 321 இன் கீழ் தள்ளுபடி செய்யப்பட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து பியூப்பில் யுனியன் ஆஃப் சிவில் லிபர்டிஸ் என்னும் தன்னார்வ அமைப்பினர் வழக்குப் பதிவு செய்தனர்.  இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் ஓகா, மற்றும் நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி ஆகியோரி9ன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த விசாரணையின் போது அமர்வு, “குற்றவியல் வழக்கில் இருந்து விடுவிக்கும் அரசின் உத்தரவு நீதிமன்றத்தை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது.  இந்த உத்தரவு குற்றவியல் நடைமுறை விதி எண் 321 இன் கீழ் அளிக்கப்பட்டிருந்தாலும் இவ்வாறு தள்ளுபடி செய்ய என்ன முகாந்திரம் உள்ளது என்பதை நீதிமன்றம் கண்டறிய வேண்டும்.  அது சரியானது இல்லை என்றால் அந்த உத்தரவை ரத்து செய்யவும் நீதிமன்றத்துக்கு உரிமை உண்டு.,

அந்த அடிப்படையில் கர்நாடக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்மீதான மீதான 61 கிரிமினல் வழக்குகளைத் தன்னிச்சையாக அரசு தள்ளுபடி செய்தது சரியான முடிவு இல்லை.  எனவே அரசின் இந்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்கிறது.  இது குறித்த விளக்கங்களைக் கர்நாடக அரசு 2021 ஆம் வருடம் ஜனவரி மாதம் 22 ஆம் தேதிக்குள்  அளிக்க வேண்டும்.  இந்த விசாரணை அதே மாதம் 29 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளது.