காரைக்கால்: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, சனீஸ்வரன் ஸ்தலமான திருநள்ளாறு கோயிலில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
சனி பகவானின் முக்கிய தலங்களில் பிரபலமானது திருநள்ளாறு ஸ்தலம். அங்கு அமைந்துள்ள தர்பாணயேஸ்வரர் கோவிலில் சனி பகவானுகுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு பய பக்தியுடன் சனீஸ்வரனை வேண்டுவோருக்கு நினைத்து நடக்கும் என்பது அதீத நம்பிக்கை. இதையொட்டி, அங்கு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் குவிவது வழக்கம்.
இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி திருவிழா டிசம்பர் 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இது இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்சம் பக்தர்கள் சனிபகவானை தரிசனம் செய்ய வருகிறார்கள். இதையொட்டி, கொரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதுடன், புதிய கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் அறிவித்து உள்ளது. இந்த விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்துள்ள நிலையில், 2021 பிப்ரவரி 14 வரை செயலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா தெரிவித்தார்.
அதன்படி, வார இறுதி நாட்களில் கோயிலுக்கு செல்ல விரும்பும் பயணிகள் கோயிலின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://thirunallarutemple.org/sanipayarchi/ -ல் பதிவு செய்ய வேண்டும்.
“செல்லுபடியாகும் பதிவு கடிதம் உள்ளவர்கள் மட்டுமே டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 14 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்”
“பக்தர்கள் முகக்கவசங்களை (Face Mask) அணிய வேண்டும்.
கோயிலுக்குள் நுழையும் இடத்தில் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும்.
தனி மனித இடைவெளிக்கான (Social Distancing) விதிமுறைகள் கோவிலில் கடைபிடிக்கப்பட வேண்டும்.
பக்தர்கள் எந்த கோவில் குளத்திலும் புனித நீராட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அர்ச்சனைகளும் சிறப்பு பூஜைகளும் செய்யப்படாது”
10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் நோயுற்ற பெரியவர்கள் இந்த முறை கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.