பெங்களூரு
திருமணமான மகளுக்கும் பெற்றோரின் அரசுப்பணியைப் பெற உரிமை உண்டு எனக் கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தாய் அல்லது தந்தை அரசுப்பணியில் இருந்து மரணம் அடைந்தால் கருணை அடிப்படையில் அந்த பணி மகன் அல்லது மகளுக்கு வழங்கப்படுவது உண்டு. ஆனால் அந்த உரிமை திருமணமான மகளுக்கு கிடையாது என்பது வழக்கமாக உள்ளது., பெங்களூருவை சேர்ந்த புவனேஸ்வரி என்னும் பெண்ணுக்கு இந்நிலை ஏற்படவே அவர் கர்நாடக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
புவனேஸ்வரியின் தந்தை அஷோக் அதிவேப்பா என்பவர் கர்நாடக மாநிலத்தில் பெலகாவி மாவட்டத்தில் உள்ள குடுச்சி என்னும் சிற்றூரில் வேளாண் சந்தையைச் சேர்ந்த அரசு அலுவலகத்தில் பணி புரிந்து வந்தார். அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பணியில் இருக்கும் போது மரணம் அடைந்தார். அவரது மகன் தனியார் துறையில் பணி புரிந்து வந்தமையால் தந்தையின் பணியைப் பெற விரும்பவில்லை.
எனவே புவனேஸ்வர் தனக்கு இந்த பணியை அளிக்கக் கோரி விண்ணப்பித்தர். வேளான் சந்தை இயக்குநர் இந்த மனுவை, “மணமாகாத மகளுக்கு மட்டுமே தனது பெற்றோரின் அரசுப் பணியைக் கருணை அடிப்படையில் பெற உரிமை உண்டு. புவனேஸ்வரி திருமணமானவர் என்பதால் அவருக்கு இந்த உரிமை கிடையாது எனக் காரணம் கூறி நிராகரித்தார். இதை எதிர்த்து புவனேஸ்வரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா, “மரணம் அடைந்தோர் மகனுக்குத் திருமணமாகி இருந்தாலும், பணியில் இருக்கும்போதே இறந்த தனது பெற்றோரின் அரசுப் பணியைப் பெறுவதற்கு உரிமை உண்டு என்கிற போது இதே உரிமை திருமணமான மகளுக்கும் உண்டு.
ஒரு பெண் திருமணமாகிப் புகுந்த வீடு சென்றுவிட்டதாலேயே அவருக்கும் அவரது பிறந்த வீட்டிற்கும் தொடர்பே இல்லை என்று அர்த்தமாகாது. எனவே மனுதாரர் புவனேஸ்வரியின் கருணை மனுவைப் பரிசீலித்து அவருக்கு அரசுப்பணி வழங்கவேண்டும்” எனத் தீர்ப்பு அளித்துள்ளார்.