பாலக்காடு
பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் ;ஜெய்ஸ்ரீராம்’ என எழுதப்பட்ட மிகப் பெரிய பேனரை அமைத்த பாஜக தொண்டர்கள் மீது கேரள காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
நடந்து முடிந்த கேரள மாநில உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் பாலக்காடு நகராட்சிக்கான தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த நகராட்சியில் உள்ள 52 வார்டுகளில் 28 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றி உள்ளது. இதனால் பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் புகுந்த பாஜக தொண்டர்கள் வெற்றியை கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ’ஜெய்ஸ்ரீராம்’ என மலையாளத்தில் எழுதப்பட்ட பேனர் ஒன்றை அமைத்து அதை நகராட்சி அலுவலக கட்டிடத்தில் தொங்க விட்டுள்ளனர். இந்த பேனரில் சத்ரபதி சிவாஜியின் படம் இடம் பெற்றிருந்தது. அத்துடன் பாஜகவினர் அதே கட்டிடத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் படத்துடன் கூடிய பேனர்களையும் அமைத்துள்ளனர்.
பாலக்காடு நகராட்சி செயலர் காவல்துறையினரிடம் புகார் அளித்து இது மத ஒற்றுமையைக் குலைக்கும் செயல் எனத் தெரிவித்துள்ளார். இதையொட்டி கேரள மாநில காவல்துறையினர் பாஜக தொண்டர்கள் மீது வழக்கு பதிந்துள்ளனர்.