பனாஜி: கோவா மாநிலத்தில் பண்டிகை காலம் துவங்கவுள்ள நிலையில், மாட்டிறைச்சி பற்றாக்குறை காரணமாக, அங்கே பல இறைச்சிக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

கோவா மாநிலத்தில் மாட்டிறைச்சி மிக முக்கிய உணவு. பண்டிகை காலங்களில், அது அதிகமாக அம்மாநில மக்களால் எடுத்துக்கொள்ளப்படும். அங்கு மாட்டிறைச்சி கடைகள் பிரபலம்.

கோவா மாநிலத்திற்கான மாட்டிறைச்சி, அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால், சமீபத்தில், கர்நாடக மாநில பாரதீய ஜனதா அரசால், பசுவதை தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து, கோவா மாநிலத்திற்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

இதனால், கோவா மாநிலத்தில் பல இறைச்சிக் கடைகள் மூடப்பட்டுள்ளன. நிலைமை இப்படியிருப்பதை அடுத்து, இறைச்சி தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணப்பட்டு, இறைச்சி வரத்தை பழையபடி மீண்டும் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த்.