சென்னை:
திமுக எம்.எல்.ஏக்களை நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என அமைச்சர்கள் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் தமிழக சுகாதாரத்துறை மினி கிளினிக்குகளை திறந்துவருகிறது, தமிழ அரசு. அதன்படி திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மட்றப்பள்ளி என்கிற கிராமத்தில், டிசம்பர் 17- ஆம் தேதி மினி கிளினிக்கை திறந்துவைக்க அமைச்சர் வீரமணி வருகை தந்திருந்தார்.
இந்த மினி கிளினிக் திறக்கும் நிகழ்வுக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில், நல்லதம்பியை அழைத்திருக்க வேண்டும். அவர் திமுகவை சேர்ந்தவர் என்பதால் நல்லதம்பியை, அழைக்கவில்லையாம். இதனால் எம்.எல்.ஏ நல்லதம்பி தலைமையிலான திமுகவினர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குச் சென்று, எங்களை ஏன் அழைக்கவில்லை என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இது எங்கள் ஆட்சி, உங்கள் எம்.எல்.ஏவை ஏன் அழைக்கனும் என அ.தி.மு.க பிரமுகர்கள் சிலர் பேசியநிலையில், அங்கு வாக்குவாதம் உருவானது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறும் நிலை ஏற்பட்டதும் காவல்துறை இருதரப்பையும் சமாதானப்படுத்தியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வருவதால், அனைத்து அரசு திட்டங்களும் அதிமுகவினர் வழியாகவே மக்களுக்குச் சென்று சேரவேண்டும். திமுக எம்.எல்.ஏ உள்ள தொகுதிகளிலும் அ.தி.மு.க பிரமுகர்களை மட்டுமே நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டும் என்கிற உத்தரவு, அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அமைச்சர்கள் மூலமாகச் சென்றுள்ளதாம். இதனால் அரசு நிகழ்ச்சிகளுக்கு திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமல்லாமல் வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் என்கிற முறையில், திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ, எம்.பி, உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அதிகாரிகள் அழைப்பதில்லை என்கின்றனர் திமுகவினர்.