சென்னை:
போராடும் விவசாயிகளையே தரகர்கள் என்று கூறி முதல்வர் பழனிசாமி கொச்சைப்படுத்திப் பேசுகிறார் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.17), கடலூர் மாவட்ட திமுகவின் சார்பில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ – 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுப் பேசியதாவது:

“மத்திய பாஜக அரசு கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களையும் விழுந்து விழுந்து முதல்வர் பழனிசாமி ஆதரிக்கிறார்.

சமீபத்தில் கூட வேளாண் சட்டங்களை ஆதரித்துப் பேட்டி அளித்த பழனிசாமி, ‘பாஜகவினர் செய்ய வேண்டிய பிரச்சாரத்தை நான் செய்து வருகிறேன்’ என்று கூச்சம் இல்லாமல் சொன்னார். அப்படிச் சொன்ன பழனிசாமியால், அந்த மத்திய அரசிடம் இருந்து சிறு நன்மைகளையாவது தமிழ்நாட்டுக்கு வாங்கித் தர அவரால் முடிந்ததா?

கடந்த 2011 முதல் தமிழகத்தில் ஏற்பட்ட எந்தப் பேரிடருக்காவது தமிழகம் கேட்ட தொகையை மத்திய அரசு கொடுத்திருக்கிறதா? இல்லை!

2011-12-ம் ஆண்டில், தானே புயல் தாக்கியபோது தமிழகம் ரூ.5,249 கோடி கேட்டது. ஆனால், பாஜக அரசு கொடுத்தது ரூ.500 கோடிதான்!

2012-13-ம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சிக்கு தமிழகம் கேட்டது 9,988 கோடி ரூபாய். ஆனால், பாஜக அரசு கொடுத்தது ரூ.656 கோடிதான்!

2015-ம் ஆண்டில் சென்னையே வெள்ளத்தில் மிதந்தது. தமிழக அரசு 25 ஆயிரத்து 912 கோடி ரூபாய் கேட்டது. ஆனால், பாஜக அரசு கொடுத்தது 1,738 கோடி ரூபாய்தான்!

2016-ம் ஆண்டில் வர்தா புயல் வந்தது. தமிழக அரசு 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய் கேட்டது. ஆனால், பாஜக அரசு கொடுத்தது வெறும் 266 கோடி ரூபாய்தான்!

2017-18-ம் ஆண்டில் ஒகி புயல் வந்தது. தமிழக அரசு 9,302 கோடி ரூபாய் கேட்டது. ஆனால், வந்தது 133 கோடி ரூபாய்தான்!

2018-19-ம் ஆண்டில் கஜா புயல் வந்தது. தமிழக அரசு 17 ஆயிரத்து 899 கோடி ரூபாய் கேட்டது. ஆனால், மத்திய பாஜக அரசு தந்தது 1,145 கோடி ரூபாய்தான்!

இப்போது நிவர் புயல் வந்தது. என்ன தரும் மத்திய அரசு? புரெவி புயல் வந்தது. என்ன தரும் மத்திய அரசு?

மத்திய அரசுக்குத் தருவதற்கு மனமில்லை! மாநில அரசுக்கு வாங்குவதற்கு பலமில்லை!

இப்படிப்பட்டவர்கள் கையில் ஆட்சி இருக்கலாமா?

மோடியைப் பார்த்தால் பயம். அமித்ஷாவைப் பார்த்தால் பயம். நிர்மலா சீதாராமனைப் பார்த்தால் பயம்! எதனால் இந்த பயம்?

செய்வது எல்லாம் திருட்டு! அதனால் யாரைப் பார்த்தாலும் பயம்!

கடலூரில் நிவர் புயலால் தண்ணீரில் மூழ்கிய பயிர்கள் மூலம் விவசாயிகள் அடைந்த துயரமும், குடியிருப்புகளை நீர் சூழ்ந்ததன் மூலமாகப் பொதுமக்கள் பட்ட துன்பமும், இன்றுவரை நிவர்த்தி செய்யப்படவில்லை! எந்தப் புயல் அடித்தாலும் அது மீனவ மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டுச் செல்கிறது. இப்படிக் கடலூரின் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள்.

லட்சக்கணக்கான ஏக்கரில் இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வாழை மரங்கள், தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன. ஆனால், இன்றுவரை இடைக்கால நிவாரணமோ, முழு நிவாரணமோ அதிமுக அரசு வழங்கவில்லை.

நான் வந்து பார்த்துவிட்டுச் சென்ற பிறகு, ஒப்புக்கு வந்து சில இடங்களைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதுவும் மத்தியக் குழு வந்ததால், அவர்களோடு வந்து பார்த்துவிட்டுச் சென்றுள்ளார்.

மத்தியக் குழுவினர் டெல்லி சென்று, அறிக்கை கொடுத்து, அந்த அறிக்கையை மத்திய அரசு ஏற்று, நிதி எவ்வளவு தரலாம் என்று யோசித்து, அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு, அதனை நிதி அமைச்சகத்துக்குச் சொல்லி, அவர்கள் அதனை மாநில அரசுக்குச் சொல்லி, மாநில அரசு கடலூர் மாவட்ட நிர்வாகத்துக்குத் தந்து, இவர்கள் மக்களுக்குக் கொடுப்பதற்கு எத்தனை மாதம் ஆகும் என்று தெரியவில்லை.

இதற்குப் பெயர் நிவாரணமா? நிவாரணம் என்றால் உடனே தரப்பட வேண்டும். அதற்குப் பேர் தான் நிவாரணம்!

மத்திய நிதி வருவதற்கு முன்னதாகவே, மாநில அரசு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி இருக்க வேண்டாமா? அப்படிக் கொடுத்தால்தானே, அது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?

மத்திய அரசிடம் எவ்வளவு நிதி கேட்டுள்ளீர்கள்? மத்திய அரசு எவ்வளவு நிதி அளிக்கப் போகிறது என்று நிருபர்கள் கேட்டபோது, ‘இப்போது தானே புயல் அடித்திருக்கிறது, பொறுங்கள்’ என்று பதில் சொல்லி இருக்கிறார் முதல்வர்.

இப்போதுதான் புயல் அடித்திருக்கிறது என்றால், அடுத்த புயலுக்குத்தான் நிவாரணம் கொடுப்பீர்களா? இதே இது ஒரு காண்ட்ராக்டருக்கு பில் பாஸ் ஆகவில்லை என்றால் பழனிசாமி துடிப்பாரா மாட்டாரா? அவர்களுக்கு மட்டும் பணியை முடிப்பதற்கு முன்னால் பணம் கொடுக்கத் துடிப்பீர்கள் அல்லவா? ஆனால், மக்களுக்கு மட்டும் நிவாரணம் கொடுப்பதில் அக்கறை வருவது இல்லையே ஏன்? காண்ட்ராக்டர்கள் கமிஷன் கொடுப்பார்கள்! மக்கள் கொடுக்க மாட்டார்கள் என்பதுதானே உண்மையான காரணம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருக்கும் ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி இப்போது அரசின் மருத்துவக் கல்லூரி. அது மட்டுமின்றி, கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியாகவும் இருக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு 13 ஆயிரத்து 670 ரூபாய் கட்டணம். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இந்த அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணம் முதலில் 4 லட்சம் ரூபாய். இப்போது, இந்த ஆண்டு 5 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய். அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டணத்தை வசூலிக்க எடப்பாடி பழனிசாமி மறுப்பது ஏன்?

இந்தக் கேள்வியை நான் எழுப்பினேன். அறிக்கை வெளியிட்டேன். ஆனால், அரசு அதற்குப் பதில் சொல்லவில்லை.

நேற்றைய தினம் கரூர் சென்ற முதல்வர், நீட் தேர்வுக்கு திமுக – காங்கிரஸ்தான் காரணம் என்று பழைய பொய்யையே திரும்பச் சொல்லி இருக்கிறார். நீட் தேர்வு முதன்முதலாக 2017-18-ம் ஆண்டுதான் தமிழகத்தில் நடத்தப்பட்டது. திமுக ஆட்சியில் இருந்தது, அதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்னால்! 2011-ம் ஆண்டு வரைதான் திமுக ஆட்சியில் இருந்தது. அதேபோல், மத்தியில் காங்கிரஸ் அரசும், 2014-ம் ஆண்டுவரைதான் இருந்தது. அப்படி இருக்கும்போது திமுகவும் காங்கிரஸ் கட்சியும் எப்படி நீட் தேர்வை 2017-ல் கொண்டு வர முடியும்?

நீட் தேர்வுக்கு 2016-ம் ஆண்டு விலக்கு பெற்றார் ஜெயலலிதா. அத்தகைய முதுகெலும்பு இல்லாத பழனிசாமி, திமுக – காங்கிரஸ் மீது பழியைப் போடுகிறார்.

இதுவரை வேளாண் சட்டங்களை ஆதரித்து வந்த பழனிசாமி, இப்போது விவசாயிகளையே கொச்சைப்படுத்தவும் தொடங்கி இருக்கிறார். மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்கள், தரகர்கள் என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி. இதை விட விவசாயிகளைக் கொச்சைப்படுத்த முடியுமா? கேவலப்படுத்த முடியுமா?

இவர்தான் வெல்லமண்டி தரகராக இருந்தவர். தரகராக இருந்தவர், விவசாயி வேடம் போடுவதால் உண்மையான விவசாயிகள் எல்லாம் தரகர்களாகத் தெரிகிறார்கள். டெல்லியில் போராடுபவர்கள் தரகர்கள் என்றால், அதை டெல்லியில் போய் சொல்வதற்குப் பழனிசாமிக்குத் தைரியம் உண்டா?

‘விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரம் ரத்து ஆகாது’ என்றும் நேற்றைய தினம் பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகள் துயர் துடைக்க 1989-ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி, விவசாயிகளுக்கு வழங்கிய மாபெரும் கொடைதான் இலவச மின்சாரம்.

மத்திய அரசால் இப்போது நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களில், இலவச மின்சாரம் பற்றியோ, மின் மானியங்கள் பற்றியோ, மின்சாரச் சலுகைகள் பற்றியோ இல்லை! அதுமட்டுமல்ல, மத்திய அரசு கொண்டு வர இருக்கிற புதிய மின்சாரச் சட்டமானது, இதுபோன்ற சலுகைகளை முற்றிலுமாக பறித்துவிடும். மின் உற்பத்தியையே பெரும்பாலும் தனியாருக்குக் கொடுக்கப் போகிறார்கள். காலப்போக்கில் மின் இணைப்புகளே தனியார் நிறுவனங்கள் தரும் என்பதைப் போல மாற்ற இருக்கிறார்கள். அப்படிச் செய்தால் இலவச மின்சாரம் தர மாட்டார்கள்.

விவசாயிகளுக்கோ, கைத்தறிக்கோ, விசைத்தறிக்கோ மின்சாரச் சலுகைகள் வரிசையாகப் பறிக்கப்படும். இது எதுவும் தெரிந்து கொள்ளாமல், பொத்தாம் பொதுவாக இலவச மின்சாரம் ரத்து ஆகாது என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. அவருக்கென்ன, இன்னும் மூன்று மாதம்தான் இருக்கிறது.

அப்படிக் கூட உறுதியாகச் சொல்ல முடியாத அளவுக்கு பழனிசாமியின் நாற்காலி ஆடிக் கொண்டு இருக்கிறது. பதவிக்காலம் முடிவதற்கு முன்னாலேயே அவரது நாற்காலியைக் கவிழ்க்க உள்ளுக்குள்ளேயே சில சதிகள் நடந்து வருவதாக எனக்குச் செய்திகள் வருகின்றன. அந்தப் பதற்றத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்க நித்தமும் ஏதோ உளறிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. விவசாயிகள் மசோதாவைத் தினமும் விழுந்து விழுந்து ஆதரிக்கக் காரணம் அதுதான்.

எப்படியாவது பாஜக தலைமையின் கருணை தனக்குக் கிடைக்காதா என்று தவம் இருக்கிறார் பழனிசாமி. அதனால்தான் எதையும் தாரைவார்க்கத் தயாராகி விட்டார். அவருக்கு மக்கள் எந்தக் காலத்திலும் கருணை காட்ட மாட்டார்கள். அதைச் சொல்லப் போகும் தேர்தல்தான், அடுத்து நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்!

உங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள, உங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களை அடமானம் வைக்கிறீர்கள். அதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று நாட்டு மக்கள் உங்களுக்கு உணர்த்தப் போகும் தேர்தல்தான் இந்தத் தேர்தல்”.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.