சென்னை: சட்டமன்ற தேர்தலில், தங்களது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னம்தான் வேண்டும் என கமல்ஹாசன் கட்சி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளது.
தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதவாக்கில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் , தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள , அரசியல் கட்சிகளுக்கான சின்னங்களை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த தேர்தலில் போட்டியிட்ட டார்ச்லைட் சின்னத்தை கேட்டிருந்தது. ஆனால், அந்த சின்னம், முதலில் கேட்ட எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில், புதுச்சேரியில் கமல்கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள கமலஹாசன், தங்களது கட்சிக்கு டார்ச் லைட் சின்னம்தான் வேணும் என அடம்பிடித்து வருகிறார். எங்களை விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ள பஞ்ச் டயலாக் பேசி வருகிறார்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, தமிழகத்திலும் ‘டார்ச் லைட்’ சின்னத்தை ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி முறையீடு செய்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து விரைவில் முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.