சென்னை: பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள சுவாமி நித்தியானந்தா, தலைமறைவாக இருந்து அவ்வப்போது அதிரடி மற்றும் காமெடியான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் சேவை நடத்தப்போவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
3 நாள் விசாவாக, கைலாசா நாட்டிற்கு வர விரும்புவோரை ஆஸ்திரேலியாலில் இருந்து இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்ல உள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த சாமியாரான நித்யானந்தா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். இவர்மீது, பாலியல் வழக்குகள் மட்டுமின்றி ஆள்கடத்தல் உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேடப்படும் குற்றவாளியாக இருந்து வருகிறார்.
இதற்கிடையில், அவ்வப்போது வீடியோவை வெளியிட்டு அலப்பறை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாகவும், அதற்கான பாஸ்போர்ட் மற்றும் வங்கி, பணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த சில மாதங்களாக நித்தியானந்தா குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது மீண்டும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில், தற்போது கைலாசா வர விரும்புவோரை இலவசமாக அழைத்துச் செல்ல இருப்பதாக வீடியோ வெளியிட்டு உள்ளார். விருப்பம் உள்ளவர்கள், மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். அவர்களுக்கு 3 நாட்கள் கொண்ட இலவச விசா வழங்கப்படும். அவர்கள், ஆஸ்திரேலியாவிற்கு வரவேண்டும் என்றும், அங்கிருந்து தான், கைலாசாவுக்கு இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்வேன் என்று தெரிவித்து உள்ளார்.
தனது நாட்டுக்கு வர விரும்புபவர்கள், ஆஸ்திரேலியா வரை தங்களது சொந்த செலவில்தான் வருகை தர வேண்டும். ஆஸ்திரேலியாவிலிருந்து, கருடா என பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவார்கள் என்றும், பயணிகள் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பும் வரை, உணவு, தங்குமிடம் போன்ற வசதிகள் கைலாசா நிர்வாகத்தின் சார்பாக இலவசமாக செய்து தரப்படும் என்று கூறியுள்ளார். மேலும் கைலாசா வருபவர்கள், ஒவ்வொரு நாளும் என்னுடன் சேர்ந்து இறைவனை வழிபட வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு நித்தியானந்தா அந்த வீடியோவில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.