சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க மத்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு வரும் 21-ந் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, புதியதாக வாக்காளர் சேர்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை தயார்படுத்துவது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வாக்குச்சாவடிகள் அமைப்பது, தனிமனித இடைவெளி உள்பட பல்வேறு பணிகள் குறித்து தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, உயர் அதிகாரிகளுடன் பலகட்டகமா ஆய்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் மற்றும், கொரோனா மற்றும் பொதுப் பிரச்னைகள், வாக்குச்சாவடிகள், மறறும் அரசியல் கட்சிகளின் தேர்தல் தொடர்பான கோரிக்கைகள், கருத்துகள் ஆகியவற்றை தெரிந்துகொள்ளும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து உயர்மட்டக்குழு தமிழகத்திற்கு வருகிறது. மத்திய தேர்தல் கமிஷனின் பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர் மட்டக் குழு டிசம்பர் 21-ந் தேதி தமிழகம் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது,
இந்த குழுவினர், 21ந்தேதி அன்று காலையில், 11.30 மணியளவில் அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது, பின்னர், அரசியல் கட்சி பிரதிநிதிகளை தனித்தனியாக சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் எஸ்.பி.க்கள் ஆகியோருடன் உயர்மட்டக் குழு ஆலோசனை மேற்கொள்கிறது.
டிசம்பர் 22-ந் தேதியில் தமிழகத்தின் உயர் அதிகாரிகளான தலைமைச் செயலாளர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.